அம்மா கொஞ்சம் தள்ளி உக்காருங்க என்ற சத்தத்தால் தன் சிந்தனை கலைந்து எழுந்து நின்றார் பாக்கியலக்ஷ்மி.
எதிரே, ரூமை சுத்தம் செய்ய வந்த ஆஸ்பத்திரி வார்ட் பாய் நின்று கொண்டிருந்தான்.
அவள் சற்று தள்ளி அமர்ந்ததும் தரையை துடைத்து விட்டு சென்று விட்டான்.
கட்டிலில் பாக்கியலக்ஷ்மியின் கணவர் சச்சிதானந்தம் ஆழ்ந்த் உறக்கத்தில் இருந்தார். மூக்கில் ஸ்வாசிக்க உதவும் கருவிகளும், வயிற்றில் சிறுநீர் வெளியேர சில குழாய்களும் பொறுத்தப்பட்டு இருந்தது.
74 வயதாகிறது சச்சிதானந்தத்திற்கு. இதுவரை ஒரு நாள் கூட நோய் நொடி என்று படுத்ததில்லை. தலை வலி வந்தால் கூட, ஒரு கைக்குட்டையை இருக்கமாக தலையில் கட்டி கண்ணை மூடிக் கொண்டு பொறுத்துக் கொள்பவர்.
நான்கு தினங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு "பாக்கி வயத்த பயங்கரமா வலிக்குதும்மா" என்றவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். என்ன செய்வதென்று தெரியாத பாக்கியலக்ஷ்மி மிகவும் பதறிப் போனார்.
பாக்கியலக்ஷ்மியின் சப்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிப்பவர்கள் விவரம் அறிந்து, ஒரு ஆட்டோவில் சச்சிதானந்தத்தை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
------- ------- ------- ------- ------- ------- ------- -------
மூத்த பிள்ளை பாஸ்கரன் ஆக்ராவில் பணிபுரிகிறான். இரண்டாவது பெண் பார்வதி திருமணமாகி பூனாவில் வசிக்கிறாள்.
இருபது வருடங்களுக்கும் மேலாக சச்சிதானந்தமும் பாக்கியலக்ஷ்மியும் தனியாகத்தான் வசிக்கிறார்கள்.
வருடத்துக்கு ஒரு முறை பாஸ்கரனும் பார்வதியும் வந்து போவதுண்டு.
தங்களுடன் ஆக்ராவில் வந்து வசிக்குமாறு சில முறை பாஸ்கரன் கேட்டாலும், சச்சிதானந்தத்திற்க்கு அதில் உடன்பாபடில்லை.
"பாக்கி, நம்பளால முடிஞ்ச வரைக்கும் அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதும்மா" என்பார்.
"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அப்பறம் பாப்போம் பாஸ்கரா" என்று ஒவ்வொருமுறையும் தட்டிக் கழிப்பார்.
பாஸ்கரனுக்கு, இரண்டு பிள்ளைகள், வேலைக்குச் செல்லும் மனைவி, நல்ல உத்யோகம் என்று நன்றாகவே இருந்தான். ஒவ்வொருமுறை பெற்றோரை தன்னுடன் வந்து இருக்குமாறு அழைக்கும் போதும் அவனது மனைவி அருகில் வந்து "ஏங்க அவங்க தான் வரலன்னு சொல்றாங்களே அப்பறம் ஏன் கேட்டுக் கிட்டே இருக்கீங்க. நம்ப வீட்டுல நம்ப சாமான் வெக்கவே எடம் இல்ல, இவங்களும் வந்துட்டா என்ன பண்றது. நான் ஆபீஸ் போவேனா, இவங்கள கவனிப்பேனா" என்று சுடு சொற்களை எரிவாள். இவளுக்கு பயந்தோ என்னவோ பாஸ்கரன் பெற்றோரை கூப்பிடுவதை குறைத்துக் கொண்டான்.
------- ------- ------- ------- ------- ------- ------- -------
பாக்கியலக்ஷ்மி சச்சிதானந்தத்தின் உறவினர் மகள் தான். பள்ளிப் பருவத்திலிருந்தே இருவரும் இணக்கமாக இருந்தவர்கள். சிறு வயதிலேயே இரு வீட்டார் பெற்றோரும் "சச்சிதானந்தத்துக்குத்தான் பாக்கியலக்ஷ்மி" என்று ஊர்ஜீதம் செய்து விட்டதால், எல்லா இடத்திலும் ஜோடிப் புறாக்கள் போல் வலம் வந்தவர்கள்.
பாக்கியலக்ஷ்மியை பாக்கி என்றும், சச்சிதானந்த்தத்தை ஆனந்தா என்றும் சுருக்கி விளித்து பரவசமாக சுற்றிய காலங்கள் பல.
இரும்பு உருக்காலையில் சூப்பர்வைஸராக வேலை. பணி இடத்தின் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்திருந்தார்கள். பணி முடிந்தததும் வீட்டிற்கு வந்து பாக்கிலக்ஷ்மியுடன் ஊர் கதை பேசி, அடுத்துள்ள கோவிலுக்கு பொடி நடை செல்வார்கள்.
மிடுக்காக சவரம் செய்த சிரித்த முகமும் கருகரு சுருட்டை முடியும் சச்சிதானந்தனிடம் பாக்கியலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தது.
மூத்த மகன் பாஸ்கரன் பிறந்தான். பிரசவத்தின் போது வலியில் துடித்த மனனவியை பார்த்து கலங்கிய சச்சிதானந்தன் "பாக்கி இந்த ஒரு குழந்தை போதும்டி. இவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சிருந்தா குழந்த்தயே வேணாம்னு இருந்திருக்கலாம்" என்று சொல்லிப் பதறினான்.
பாஸ்கரனின் பள்ளி வெகுதூரம் தள்ளி இருந்ததால், பள்ளிக்கு அருகாமையில் வீடு பார்த்து குடியேறினார்கள். சச்சிதானந்தன் தினமும் சைக்கிளில் உருக்காலைக்கு சென்று வந்தார். பிள்ளைக்காக செய்த முதல் அட்ஜஸ்ட்மண்ட் அது.
மூன்று வருடத்திர்க்கு பிறகு பார்வதியும் பிறந்தாள். இந்த முறை பாக்கியின் வலி கண்ட சச்சிதானந்தம் இனி குழந்தை வேண்டாம் என்று தீர்க்கமாக சொல்லி விட்டார்.
அக்கம் பக்கத்தில் சச்சிதானந்தத்திற்க்கு நல்ல மதிப்பு இருந்த்தது. யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்காமல், மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்வார்.
வயது ஆனாலும், அவர் மிடுக்கு குறையவில்லை. வெள்ளை வேட்டி சட்டையில் வலம் வரும் கணவரை காணும் போது பாக்கியலக்ஷ்மிக்கு அவளை அறியாமல் ஒரு புன் முறுவல் வரும்.
------- ------- ------- ------- ------- ------- ------- -------
ஆஸ்பத்திரிக்கு தந்தையை காண பாஸ்கரனும் பார்வதியும் வந்து விட்டார்கள். மூன்று வருடம் ஆகிவிட்டது, பாக்கி இவர்களை பார்த்து. பாஸ்கரன் வேளை பளு காரணமாக ரொம்பவே மாறிப் போயிருந்தான்.
"இப்ப எப்படி டாக்டர் இருக்கு. எப்ப டிச்சார்ஜ் பண்ணலாம்" என்ற பாஸ்கரனின் கேள்விக்கு நீண்ட பதில் அளித்துக் கொண்டிருந்தார் டாக்டர்.
பாக்கியலக்ஷ்மிக்கு கேட்டதெல்லாம் "organ failure, urinary track failure" போன்ற வார்த்தைகள்தான். நடுங்கிப் போனாள் இதைக் கேட்டு விட்டு.
இந்த நான்கு நாட்களில் ஒரு நாள் கூட சச்சிதானந்தன் கண் திறந்து இவளை பார்க்கவில்லை.
திருமணமான ஐம்பது வருடத்தில் பேசாமல் ஒரு நாளும் இருந்ததில்லை.
டாக்டரிடம் பேசி விட்டு வந்த பாஸ்கர், பாக்கியலக்ஷ்மியிடமும் பார்வதியிடமும் பேச ஆரம்பித்தான் "அப்பாக்கு major infection ஆகி இருக்காம். multiple organ failure ஆனதால lungs கும் urinary bladder கும் ட்யூப் வச்சிருக்காங்க. 8 மணீ நேரத்துக்கு ஒரு தடவை ஒரு பெரிய ஊசி போடணுமாம். அது போட்டாதான் ஒவ்வொரு பார்ட்டும் வேலை செய்ய ஆரம்பிக்க வாய்ப்பிருக்காம்" என்று கண்ணீருடன் கூறினான்.
பாக்கியலக்ஷ்மிக்கு அவளை சுற்றி பூமி அதிர்வது போன்றிருந்தது. செவி அடைத்து மயங்கி விழுந்தாள்.
------- ------- ------- ------- ------- ------- ------- -------
"ஒவ்வொரு ஊசியும் 4000 ரூபாயாம்டி. அப்பாக்கு ரொம்ப வயசானதால ஊசி வேலை செய்றதும் நிச்சயம் இல்லையாம். ஏற்கணவே 6 போட்டாச்சு. எனக்கு வேற எக்கச்சக்க வேல இருக்கு ஊர்ல. என்ன பண்றதுண்ணே தெரில" என்று பார்வதியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பாஸ்கரன்.
"எனக்கும் போணும் பாஸ்கர். நான் இல்லாம பசங்கள மேய்க்க அவரு ரொம்ப கஷ்டப்படறாரு. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணேன். நான் நாளைக்கு கெளம்பி போறேன். ஏதாவது சீரியஸ்னா phone பண்ணு அவரையும் கூட்டிட்டு வரேன்" என்று அவள் பங்கிற்கு பார்வதி சொன்னாள்.
'ஆஸ்பத்திரி செலவு மட்டும் இது வரைக்கும் 65000 ரூபாய் ஆயிருக்கு. நான் தான் அதப் பாத்துக்கறனே, நீ இங்க கொஞ்ச நாள் இருந்து பாத்துக்கவாவது கூடாதா" என்று குரலை உயர்த்தினான் பாஸ்கரன்.
பாக்கியலக்ஷ்மி இவர்களின் பேச்சை கேட்டு கண் விழித்தாள்.
"நீங்க ரெண்டு பேரும் போய் உங்க வேலையை பாருங்கப்பா. அப்பாக்கு ஒண்ணும் ஆகாது. நான் பாத்துக்கறேன். குணம் ஆனதும் phone பண்றேன். பசங்களோட பொறப்பட்டு வாங்க போதும். இங்கதான் ந்ர்ஸ் நல்லா பாத்துக்க்றாங்களேப்பா கவலப்படாம பொறப்படுங்க" என்றாள் பாக்கி.
------- ------- ------- ------- ------- ------- ------- -------
பாஸ்கரனும் பார்வதியும் அரை மனதோடு புறப்பட்டு சென்றார்கள். பாக்கியலக்ஷ்மிக்கு அவர்கள் மேல் கோபம் வரவில்லை. கணவனின் இப்பொதைய நிலை தான் அவளுக்கு நெஞ்சடைக்கும் துக்கத்தை கொடுத்தது.
"கொஞ்சம் தள்ளி நில்லுங்கம்மா" என்று சொல்லிக்கொண்டு வந்தாள் நர்ஸ். பாக்கி நகர்ந்ததும், சச்சிதானந்த்தத்தின் உடம்பில் ஒரு வெள்ளை துண்டில் வெண்ணீரால் துடைத்து விட்டாள். மூக்கில் இருக்கும் ட்யூபை எடுத்து, சிலிண்டரை மாற்றினாள். வயிற்றில் சொருகி இருந்த ட்யூபிலிருந்து வ்ழியும் சிறு நீரை அகற்றி புதிய கருவி பொறுத்தினாள். மற்ற பல கருவிகளையும் மாற்றிப் பொறுத்தினாள்.
சலனம் அற்றுக் கிடக்கும் சச்சிதானந்தமும் இழுத்த இழுப்பிற்க்கெல்லாம் வந்தார்.
இதைக் கண்ட பாக்கியலக்ஷ்மிக்கு நெஞ்சு கனத்த்து.
என்றோ ஒரு பௌர்ணமி நாளன்று, மொட்டை மாடியில் "உங்ளுக்கு முன்னாடி நான் போய் சேர்ந்திடணும்க, சுமங்கலியா" என்றவளிடம், "அடிப்பாவி, நீ போயிட்டா என்ன யாரு பாத்துப்பா" என்று புன்முறுவலுடன் கணவன் கூறியது நினைவுக்கு வர, கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. ஆறுதல் கூற யாரும் இல்லாமல் வெகு நேரம் அழுது விட்டாள் பாக்கியலக்ஷ்மி.
கணவர் அருகில் சென்று அவரின் அமைதியான முகத்தை கண்டாள். கணவரின் நெற்றியை வருடியபடி "இப்படி பண்ணிட்டியே ஆனந்தா. என் கூட இனி எப்ப பேசுவ. பாஸ்கரும், பார்வதியும் உனக்கு சரி ஆன உடனே வருவாங்க. சீக்கிரம் சரியாகணும்.." என்று முனகினாள்.
சற்று நேரம் வெறித்து கணவரை பார்த்த பாக்கியலக்ஷ்மி சச்சிதானந்தத்தின் மூக்கில் இருந்த ட்யூபை மெல்ல வெளியே எடுத்துப் போட்டாள்.
சச்சிதானந்தம் உடம்பு சலனம் இல்லாமல் முழுதும் அமைதியானது.
கணவனின் நெற்றிக்கு முத்தமிட்ட பாக்கியலக்ஷ்மியின் கண்களில் தாரை தாரயாக நீர் சுரந்தது.
ஆனால், அவள் முகத்தில் இப்பொழுது ஒரு தெளிவு தெரிந்தது.
------- முற்றும் ------- ------- ------- ------- -------