Thursday, November 29, 2007

துச்சாதனர்களால் தான் நல்வழி பிறக்கும்

பிறவியில் மிகவும் பொறுமைசாலிகள் நாமெல்லாம்.
ஊரே பற்றி எரிந்தாலும், நம் வீட்டுக்குள் நெருப்பில்லை என்றால், அக்கடா என்று வேடிக்கை பார்க்கும் கூட்டம் நமது.

பட்டப் பகலில் நம் கண்முன்னே நடக்கும் பல கேடுகெட்ட அயோக்யத்தனங்களை, கண்டும் காணாமல், நம் பிழைப்பே பிரதானம் என்று சீரிய நடையில் செல்வது நமக்கு ரொம்பவே பழகிவிட்ட ஒன்று.

மலேரியா முதல் சிக்கன் குனியா வரை, கொசுக்களால் புதுப் புது வியாதிகள் வருவது தெரிந்தாலும், தெருவில் ஓடும் திறந்த சாக்கடையில் சாக்கடை தேங்குவதைப் பற்றி ஒரு நாளும் கவலைப் படாத கர்ம யோகிகள் நாம்.
சாக்கடையைத் தாண்டிச் செல்லும்போது மட்டும், மூக்கை நாசூக்காக மூடியபடி 'Dirty Fellows' என்று நாம் பக்கத்து வீட்டாரை திட்டுவதும், அவர்கள் நம்மை திட்டுவதும், தினசரிக் காட்சி.

தார் பார்த்து ஆறு வருடம் ஆன, ரோடு. வண்டியில் போகும் போது, மறவாமல், அரசாங்கத்தை அசிங்க அசிங்கமாக மனதிற்குள் வசைபாடி, டிப்-டாப்பாக அலுவலகம் செல்லும் கூட்டம் நமது.

தவறுகள் நடக்கும்போது நூற்றில் ஒரு பத்து பேராவது, எதிர்த்துக் கேட்டால் தான், தவறுகள் திருத்தப்பட, கொஞ்சமாவது வாய்ப்பிருக்கிறது.
'எவனாவது பாத்துப்பான்' என்னும் நமது ஒவ்வொருவரின் எண்ணம் தான், நம் இன்றைய நிலைக்குக் காரணம்.

இந்தியா மிளிரத்தான் செய்கிறது. நகரத்தின் வசதிகளும் பள பளப்புகளும் வியக்க வைக்கிறது. எப்படியோ இருந்த நாம், கடந்த பதினைந்து வருடத்தில் வளர்ந்த வேகம் பிரமிப்பு. ஆனால், சற்றே உள்புரம் புகுந்து பார்த்தால், நம் மக்கள் வாழும் வசிப்பிடங்களின் கீழ் மட்ட நிலை புரியும்.
சீரமைக்கப் படாத சாலைகள், சாக்கடைகள், என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை எல்லாம் சரியாகும் நாள் என் கண்ணுக்குப் புலப்படவில்லை. அதற்கான சின்ன அறிகுறி கூட தென்படவில்லை.

தெரிஞ்ச கதைதான், இது என்ன நமக்கு புதிதா என்கிறீர்களா?

புதிது இல்லைதான்.

ஒரு மந்த நிலையிலேயே வாழப் பழகிக் கொண்டு விட்டோம் நாமெல்லாம்.
சுலப வாழ்க்கை வாழ, எவ்வளவு கீழ்தரமாகப் போக முடியுமோ அவ்வளவும் இறங்கி வாழ்கிறோம்.
எவன் எக்கேடு கெட்டாலும் கவலைப் படுவதில்லை. நம் வயிறு நிறைவதே பிரதானமாய்க் கொண்டுள்ளோம்.

இன்றைய தினசரியில் அஸாமில் நடந்த கொடுமைகள் கலர் படங்களுடன் வந்திருந்தது.
பத்தாம் வகுப்பு ஆதிவாசி மாணவியை துகிலுரித்து நடு ரோட்டில் ஓட விட்டிருக்கிறார்கள் துச்சாதனர்கள்.
இன்னொரு பெண்ணின் உடையை கிழித்து, அவளது பிறப்புறுப்பில் காலால் எட்டி உதைக்கிறான் ஒரு கொடியவன்.

இதை எல்லாம் கண்டு வேடிக்கை பார்த்து உச்சு கொட்டியிருக்கிறது ஒரு கூட்டம். இன்னொரு கூட்டம், போட்டி போட்டுக் கொண்டு கேமரா ஃபோனில் படம் பிடித்து ஊரெல்லாம் பரப்ப்யிருக்கிறது பெண்னின் நிர்வாணத்தை.
ஊடகங்கள் சும்மா இருக்குமா? அவர்கள் பங்கிற்கு அவர்களும் பரப்பினார்கள் இந்த 'த்ரில்லிங்' காட்சிகளை. மக்களாகிய நாமும் கண்டு ரசித்தோம்.

இந்த அக்ரமத்தைக் கண்ட 'பர்மன்' என்ற 36 வயது மனிதர் மட்டும், கொஞ்சம் வித்யாசமாக, மனிதாபிமானத்தோடு, சிந்தித்து, செயல்பட்டிருக்கிறார்.
நிர்வாணமாக ஓடிய மாணவியைக் கண்டு பதறிப்போய் தன் சட்டையை கழற்றி அவளுக்கு மாட்டி, அவளை போலீஸ் வண்டியில் பாதுகாப்பாய் ஏற்றி காப்பாற்றியிருக்கிறார். அவளின் நிலை கண்டு கண்ணீர் விட்டாராம்.

ஆதிவாசிகள் 'பர்மனின்' கடையை சூரையாடிய பொழுதும், காழ்ப்புணர்ச்சி இல்லாமல், ஆதிவாசி மாணவிக்கு உதவி இருக்கிறார்.
ஆதிவாசிகளை தாக்கியவர்கள், கண்டிப்பாய் அஸாமியர்களாய் இருக்க முடியாது. அவர்கள் வேளி ஆட்கள். அஸாமியர்கள் நற்குணம் கொண்ட சாதுக்கள் என்று தன் இனத்தையும் விட்டுக் கொடுக்காமல் எல்லா பேட்டிகளிலும் சொல்லி வருகிறார்.

வழக்கம் போல், ஏதாவது ஒரு ஓட்டு ஓநாய், இதை எல்லாம், தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இந்த மாதிரி செய்திகளையெல்லாம் படிக்கும் போது, மனது பதறுகிறது.
கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. பல கேள்விகள் பிறக்கிறது.
இந்த மிருகங்கள் வாழும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதே வெட்க்கக் கேடாகத் தோன்றுகிறது. எங்கிருந்த வருகிறது இத்தனை திமிர் இந்த ஓநாய்களுக்கு?

ஆனால், நாளிதழின் அடுத்த பக்கம் திருப்பியவுடன் இதை விடவும் சுவாரஸ்யமான சினிமா செய்தியோ, வேறு பல கிசு கிசுக்களோ வந்திருந்தால், ஆதிவாசிப் பெண் மறந்தே போகிறாள்.

நம்முடைய இந்த selective amnesia தான் ஓநாய்கள் தொடர்ந்து ஆட்டம் போட வழி வகுக்கிறது.

துச்சாதனர்கள் தொடர்ந்து செய்யும் அமளிகளைப் படித்துப் படித்து, எரிச்சல் ஏறி ஏறி, என்றாவது ஒரு நாள், இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலை வரலாம்.

அப்படி நிகழ, இன்னும் ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகள் ஆகலாம்.

அன்றுதான் ஒரு மாற்றம் பிறக்கும்.

இந்தியா, உண்மையில் மிளிர அன்றுதான் வழி பிறக்கும்.

துச்சாதனர்களே, தொடர்ந்து எங்கள் பெண்களை நிர்வாணமாக்குங்கள்.
அப்படியாவது எங்களுக்கு சொரணை பிறக்கிறதா என்று பார்க்கலாம்.

Rathnesh's related post here.ஜெய்ஹிந்த்!