Tuesday, November 07, 2006

லாட்டரி கோவிந்தன் ( தேன்கூடு போட்டிக்கு )


கோவிந்தனுக்கு அவன் கண்ணயே நம்ப முடியல. கைல இருந்த நாயர் கட தினத் தந்தி பேப்பர இன்னொரு தடவ நல்லா பாத்தான். இன்னொரு கைல நேத்து ராத்திரி வாங்கின லாட்டரி சீட்டு.
லாட்டரி சீட்டையும் பேப்பரையும் மாத்தி மாத்தி பாத்தவன் கண்ணு அகலமா தொறந்தது.
"டேய் முருகா. ஜாக்பாட் அடிச்சுடுச்சுடா. 20 லட்சம் ரூபாடா" - கோவிந்தன் கத்தின கத்து தெரு ஓரத்துல இருந்த ஆட்டோ காரனெல்லாம் திரும்பி பாத்தான்.

முருகன் கொஞ்சம் கூட அலட்டிக்காம் "கோவிந்து சும்மா உடான்ஸ் வுடாத. போய் வேலய பாருடா" ன்னு சொன்னான்.

"டேய் நாயே மெய்யாலுமாடா. இத நீயே பாரு" னு சொல்லி பேப்பரையும் சீட்டையும் முருகன் கிட்ட கொடுத்தான்.

முருகன் லாட்டிரி சீட்டையும் பேப்பரையும் மாத்தி மாத்தி பாத்து பேயரஞ்ச மாதிரி அப்படியே நின்னான். "டேய் மாப்ள. அதே நெம்பரு தாண்டா. படுபாவி மச்சந்தாண்டா உனக்கு. ஜாக்பாட்ரா. 20 லட்சம் டா.", கத்தினான் முருகன்.

"ஹி ஹி ஹி" கோவிந்தனுக்கு சந்தோஷத்துல தல கால் புரீல. கத்தி சிரிச்சிட்டே இருந்தான். மூச்சு முட்டிச்சு.

"முருகா 20 லட்சம் டா, இப்ப என்னடா பண்றது" - முருகன பாத்து கேட்டான்.

"எங்கடா வாங்கின சீட்ட. மொதல்ல அந்த சீட்டை டவுசர்ல பத்திரமா வை. அப்பால அந்த கடைல போயி காசு எங்க வாங்கரதுன்னு கேக்கலாம்" - முருகன் மூச்சு விடாம பேசிட்டே இருந்தான்.

"ஸ்கூல் பக்கத்துல நம்ம மொதலியார் கடைல தான் வாங்குனேன். வாங்கும் போதே அந்த ஆளு சண்ட வேற போட்டான். இது வரைக்கும் இருக்கர கடன செட்டில் பண்ணு கோவிந்தானு. நான் தான் வழக்கம் போல எஸ்கேப் ஆயிட்டேன்" மூச்சு முட்ட முட்ட கத்திப் பேசினான் கோவிந்தன்.

"என்ன மறந்துடாத கோவிந்தா" - முருகன் இளிச்ச வாயோட சொன்னான்.

"அட நாயே. உன்ன எப்படிடா மறப்பேன். உனக்கும் உன் தங்கச்சிக்கும், ஆளுக்கு ஒரு லட்சம் தாரேன். கால் டாக்ஸி வாங்கி ஜமாய் டா முருகா" - கோவிந்தன் சட்டுனு சொன்னத கேட்டு முருகன் கண்ணுல தண்ணி விந்திடுச்சு. கோவிந்தன அப்படியே தோள்ள தூக்கி ஒக்கார வச்சான் முருகன்.

ரெண்டு பேரும் மொதலியார் கடய பாத்து நடக்க ஆரம்பிச்சாங்க.

----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

கோவிந்தனும் முருகனும் சின்ன வயசுலேர்ந்தே பழக்கம். ரெண்டு பேரும் செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருக்கர ஒரு சேரிலதான் இருக்காங்க.

கோவிந்தனுக்கு கல்யாணம் ஆயி நாலு வருஷத்துலயே பொண்டாட்டி மஞ்சக் காமால வந்து செத்து போயிடுச்சு.
ராமு, வள்ளி னு 11 வயசு பையனும், 7 வயசு பொண்ணும் இருக்கு.

அம்மா இல்லாத்ததால ரொம்ப பாசமா வளப்பான் பசங்கள. அடிக்க மாட்டான்.

கோவிந்தனுக்கு சரியான வேல கெடயாது. மூணாம் கிளாஸ் மட்டும் படிச்சிருக்கான்.
குப்பைத் தொட்டில இருக்கர ப்ளாஸ்டிக், இரும்பு, பாட்டில் சாமான பிரிச்சு எடுத்து ஒரு கோணிப் பைல போட்டு பழைய பேப்பர் கடை வச்சிருக்கர ரங்கப்பன் கிட்ட விப்பான்.
ரங்கப்பன் கோணில எவ்ளோ கனம் இருந்தாலும், ஒரு நாளைக்கு 14 ரூபாய்க்கு மேல கொடுக்க மாட்டாரு.

மழை காலத்துல 14 ரூபாயும் கெடைக்காது. சாப்பாட்டுக்கே கஷ்டம்தான்.

மழை காலத்துல மத்த என்ன வேல கெடைக்குதோ அத செய்வான்.

முக்கியமா, பக்கத்து ஊர்ல இருக்கர வீடுகள்ல தோட்ட வேல, தண்ணி எறைக்கரது இந்த மாதிரி வேலையும் செய்வான். ஆனா, இதெல்லாம் செஞ்சா 10 ரூபாதான் கொடுப்பாங்க.

மூத்த பையன் ராமுவ பள்ளிக்கூடம் அனுப்பணும்னு ரொம்ப நாள் ஆச. ஆனா வசதி தான் இல்ல. வள்ளியயாவது ஒழுங்கா சாப்புட வச்சு படிக்க அனுப்பணும்னு, ராமு கிட்டயும் ஒரு கோணிப்பய்ய கொடுத்து தொழில் கத்துக் கொடுத்துட்டான்.
ராமுவும், வீட்டு நெலம தெரிஞ்ச நல்ல பையன். தெனமும் கெடைக்கர 10 ரூபாய கோவிந்தன் கிட்ட கொடுத்திருவான். அவனுக்காக ஒண்ணும் வாங்கிக்க மாட்டான்.

அப்பனும் புள்ளயும் சேந்து வள்ளிய பள்ளிக்கூடத்துல சேத்து விட்டு அவளுக்கு வேண்டியதேல்லாம் கஷ்டப்பட்டு செஞ்சாங்க.

ஒரு நாள் ராமு கோவிந்தன் கிட்ட வந்து "யப்பா, கண்ணன் இருக்கான்ல, அவன் ஒரு நாளைக்கு 40 ரூபா சம்பாதிக்ரான். நம்ம ரத்னம் மாமா இருக்காருல்ல, அவரு கூட போயி சாக்கடையெல்லாம் கழுவி விட்டா 40 ரூவா தருவாராம். மதியானம் சாப்பாடும் வாங்கி கொடுத்துருவாராம். நானும் போட்டாப்ப?" என்றான்.

"டேய். அதெல்லாம் வேணாம்டா. இந்த வேல பாரு போதும். எனக்கு நல்ல வேல கெடச்சா நீயும் பள்ளி கூடம் போவணும். சாக்கட அள்ராராம் சாக்கட. போடா" கோவத்துடன் கத்திவிட்டான் கோவிந்தன்.

மறு நாளே, ரத்னம் மாமாவை பார்த்து, "சாக்கடை கழுவுர வேலைக்கு நானே வரேன்னு" சொல்லி கோவிந்தனே போய் கேட்டுப் பாத்தான். என்ன இருந்தாலும் 40 ரூபா தெனமும் கடச்சா பசியார பசங்க சாப்பிடலாமே. மெதுவா வேற நல்ல வேல பாத்து அப்பறம் மாறிக்கலாம் னு மனசுல கணக்கு போட்டான்.

முருகன் லாரில மணல் லோட் அள்ளிப்போடர வேல. கோவிந்தனுக்கும் அந்த வேல ஏற்பாடு பண்ண ரொம்ப நாளா ட்ரை பண்றான். மொதலாளி படிய மாட்றாரு.

சாக்கட கழுவரது ஒண்ணும் அவ்ளோ கஷ்டமா தெரீல ஆரம்பத்துல. ஆனா, அடப்பு ஜாஸ்தி இருந்தா சாக்கடேல கால விட்டு கொத்தி விடணும். செல நாள் கால்ல புண்ணு வந்துடும். நாத்தம் கொடல பொரட்டும். சாப்பாடு கூட எறங்காது.

பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கர சாக்கடை வாரத்துக்கு ஒரு தடவ அடச்சுக்கும். பஸ்க்கு நிக்கரவன் எல்லாம் குப்பைய கரெக்டா சாக்கடைல போட்டுருவானுங்க. தண்ணி போகாம அப்படியே நிக்கும். குச்சி எல்லாம் விட்டு குத்தினாலும் தண்ணி போவாது.
வேற வழியே இல்லாம என்னா பண்றதுன்னு யோசிச்சுனு இருந்தான் ஒரு நாள்.

"கோவிந்தா என்னடா நோவாம குத்தினு இருக்கர. மூலைல man-hole இருக்கு பாரு. அந்த மூடிய பொரட்டி போட்டு மெதுவா உள்ள எறங்கு. உள்ள கை விட்டு துழாவி அடச்சுக்கினு இருக்கர பேப்பரையெல்லம் எடுத்து வெளில போடு சரியாயிடும்" - ரத்னம் மாமா சூப்பரா ஐடியா கொடுத்தாரு.
உள்ள எறங்கி கடல்ல முத்து குளிக்கர மாதிரி முங்கி முங்கி குப்பய எடுத்து போட்டான் கோவிந்தன்.
அடச்ச சாக்கடையும் ஓடிச்சு, அன்னிலேர்ந்து அவனுக்கு சாப்பிடர ஆசையும் ஒடிச்சு. அன்னிக்கு பூரா வாந்தி எடுத்து படுத்துட்டான்.

ஏதோ ப்ரொமோஷன் கொடுத்த மாதிரி, அன்னிலேருந்து எங்க சாக்கட அடச்சாலும் "கூப்புடு கோவிந்தன" என்று ரத்னம் மாமா கத்துவாரு.
முத்து குளிக்கும் நாள் மட்டும் 60 ரூபா கெடைக்கும். கவுர்மெண்டுல 100 ரூபா கொடுப்பாங்களாம், ஆனா 40 ரூபாய ரத்னம் மாமா அமுக்கிடராருனு யாரோ பேசும் போது கேட்டான் கோவிந்தன். ஆனா அத பத்தி அவன் ரத்னம் மாமா கிட்ட ஒண்ணும் கேட்டுக்கல.

ராமு கிட்ட இந்த வேல செய்றத பத்தி சொல்லல. வள்ளி மட்டும், "யப்பா என்னப்பா உன் மேல இப்படி நாத்தம் அடிக்குது. எங்க பொரண்டுட்டு வர" னு கேப்பா.
"வேர்வ நாறுது, நான் போயி குளிச்சுட்டு வரேன்னு" வெளில கெளம்பிடுவான்.

"ராமுவ இந்த வேலயெல்லாம் செய்ய விடக்கூடாது. நல்லா படிக்க வெக்கணும். பாவம் புள்ள நம்மள மாதிரி ஆயிடக் கூடாது" னு ஒப்பாரி வச்சான் முருகன் கிட்ட.

வேற நல்ல வேலை ஒண்ணும் கெடைக்காததால மொதலியார் கடைல தெனம் ரெண்டு ரூவா கொடுத்து லாட்டரி வாங்குவான்.
மொதலியார் ஒவ்வொரு தடவயும் "டேய் லாட்டரி கோவிந்தா, இருக்கர பாக்கிய கொடுத்துட்டு அப்பரம் லாட்டரி வாங்குவியோ, வெஷத்த வாங்குவியோ ஏதாவது பண்ணு. இனிமே இந்த பக்கம் வராதன்னு" சொல்லுவார்.

கோவிந்தனும் சிரிச்சிட்டே "நாளிக்கு குடுத்துடரேன் மொதலியாரு. சீட்ட குடு நீ. நாளிக்கே பம்பர் அடிச்சுதுன்னா மொதல்ல உன் பாக்கி கொடுத்துட்டு தான் மறு வேல" - சொல்லிட்டு சீட்ட வாங்கிட்டு ஒடிடுவான்.

லாட்டரி வாங்க ஆரம்பித்து 2 வருஷம் ஆச்சு. அதுல விட்ட காச வச்சு புது சொக்காவாவது வள்ளிக்கும் ராமுவுக்கும் வாங்கி கொடுத்துருக்கலாம்னு அப்பப்ப தோணும்.
ஆனாலும், விக்ரமாதித்தன் மாதிரி தெனமும் லாட்டரி வாங்கரது ஒரு பழக்கமாயிடுச்சு.

----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

மொதலியார் கடைக்கு நடக்க ஆரம்பிச்ச கோவிந்தன், "டேய் முருகா, 20 லட்சம்னா எவ்ளோ நூறு ரூபாடா? என்ன வேணா வாங்கலாம்ல?" - முருகனை பாத்து கேட்டான்.

"கோவிந்தா. நல்லா கேட்டடா. நம்ம போஸ் ஒரு பழைய ஆட்டோ வாங்குணானுல்ல. அது 2 லட்சம்தான். அத மாதிரி 10 வாங்கலாம்டா. ஆட்டோ மொதலாளி ஆயிடலாம்டா நீ. ஹ்ம்ம் 18 வாங்கலாம். எனக்குதான் 2 லட்சம் தரேன்னியே" - அசடு வழிஞ்சான் முருகன்.

"அடேங்கப்பா. இனி ஒரு கவலயும் இல்லங்கர. புள்ளையார் காப்பாத்திட்டான். டேய், உனக்கு 2 லட்சம் என்னடா என்ன வேணாலும் தரேன். ராமு, வள்ளி, உன் பசங்க எல்லாத்தையும் நல்ல ஸ்கூல்ல சேக்கணும்டா. என்னா சொல்ற" - இது கோவிந்தன் சொன்னது.
முருகனுக்கும் இதக் கேட்டு சந்தோஷம் - "பண்ணிடலாம்டா கோவிந்தா" சொல்லிட்டே நடந்தான்.

----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

மொதலியார் வழக்கம் போல் ஒரு பழைய வேட்டியில் இருந்தார். சட்டை அணியாமல் தொப்பையை தடவியபடி "என்னடா கோவிந்தா. காலைலியே வந்துட்ட. துட்டு கொண்டாந்தியா" - வழக்கம் போல கேட்டாரு.

"மொதலியார், யார பாத்து இன்னா கேக்கர. நம்ம கோவிந்தன் நேத்து உன்னாண்ட வாங்கின லாட்டரி சீட்டுக்கு 20 லட்சம் விழுந்திருக்கு. கொஞ்சம் சரி பாத்து, எங்க காச வாங்கணும்னு சொல்லு" - மிரட்டல் கொரல்ல முருகன் கேட்டான்.

இத கேட்ட மொதலியாரும் நம்ப முடியாம, கோவிந்தன் குடுத்த சீட்டையும் தினத் தந்தியையும் மாத்தி மாத்தி பாத்துட்டு கத்தினாரு - "கோவிந்தா அதிர்ஷ்டக்காரண்டா நீ. நெஜமாவே 20 லட்சம் அடிச்சிருக்குடா."

கோவிந்தனுக்கு இத கேட்டதும் இன்னும் சந்தோஷம் ஜாஸ்தி ஆயிடுச்சு. "மொதலியார் காச எங்க போயி வாங்கணும். சீக்கரம் சொல்லுங்க. பணத்த வாங்கிட்டு மொதல்ல பசங்கள்ட போயி விஷயத்த சொல்லணும்" - இப்படி சொல்லிக்கொண்டே போனவன பாத்து, மொதலியார் "அவசரப் படாத, மொதல்ல லாட்டரி கம்பெனிக்கு போன் போட்டு பேசிடரேன்" சொல்லிக்கிட்டே போன் போட்டு மொதலியார் விவரத்த கேட்டாரு.

போன் வச்சுட்டு "கோவிந்தா. சீட்ட கொண்டு போய் பக்கத்துல இந்தியன் பாங்க் இருக்குல்ல அங்க குடுத்தா, பிடித்தமெல்லாம் போக 18 லட்சத்தி 40 ஆயிரம் ரூபா கொடுபாங்களாம். எனக்கும் 20 ஆயிரம் ரூபாய், கமிஷன் இருக்காம். அத தபால்ல அப்பறமா அனுப்புவாங்களாம். நானும் உன் கூட வரேன். வா பாங்குக்கு போயிட்டு காச வாங்கி, உன் பேர்ல ஒரு சேமிப்பு கணக்கும் ஆரம்பிச்சு அதுல காச போட்டுருவோம். கையில அவ்ளோ காசு இருந்தா நல்லதுல்ல" - தனக்கு காசு வரப்போவுது னு தெரிஞ்ச குஷீல மொதலியாரும் உதவரதுக்கு துடிச்சாரு.

கடையை சாத்தி விட்டு, பக்கத்துல இருந்த ஆட்டோவ மொதலியார் கூப்பிட்டு "பாங்க் போணும்பா" என்றார். கோவிந்தன், முருகன் ஏற வழிவிட்டு இவர் கடைசியா ஏறினார்.

----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

வங்கிக்குள் செல்வதர்க்குள் சேதி பரவி கூட்டம் சேர்ந்துடுச்சு. "கோவிந்தா மச்சம் தாண்டா உனக்கு" இப்படி சொல்லி எல்லாரும் கை கொடுத்தாங்க. முதுகுல தட்டிக் கொடுத்தாங்க.

ரத்தினம் மாமா, "லாட்டரி கோவிந்தா. நம்பள எல்லாம் மறந்துடாதப்பா" - இப்படிச் சொல்லி கோவிந்தனை கட்டிப்புடிச்சாரு.

முருகன், கும்பலுக்கு நடூல வழி பண்ணி, கோவிந்தன பாங்க் மானேஜர் கிட்ட கூட்டிட்டு போனான்.
மொதலியாரும் எழுத வேண்டியத எழுதி கொடுத்து லாட்டரி பணத்தை வாங்கி கோவிந்தன் பேரில் சேமிப்பு கணக்கு ஆரம்பிச்சு கொடுத்தாரு.
மானேஜர் "இப்ப செலவுக்கு எவ்ளோ வேணும் சார்" என்று பவ்யமா கேட்டாரு.

"1000 ரூபா கொடுங்க ஐயா" - வெளில கேக்காத மாதிரி கோவிந்தன் சொன்னான்.

----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

1000 ரூபாயுடன், கோவிந்தனும், முருகனும் வெளியில் வந்தார்கள்.

"மாப்ள, மொதல்ல கடைக்கு போயி, பசங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கறேன். வள்ளிக்கு நாயர் கடை போண்டானா உசுரு. ராமு பஸ் ஸ்டாண்ட் கிட்ட தான் எங்கயாவது குப்ப பொறுக்கிட்டிருப்பான், நீ போயி அவன தேடி வூட்டுக்கு கூட்டியாந்துடு. நானும் வீட்டுக்கு வந்துடறேன்" - கோவிந்தன் மட மடனு பேசிட்டே போனான்.
"டேய், இந்தா 200 ரூபா. அப்படியே உன் பசங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு போ" முருகன் கிட்ட 200 ரூபாய நீட்டி கோவிந்தன் சொன்னான்.

----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

ஓட்டமும் நடயுமாக நாயர் கடைக்கு வந்து 10 போண்டா வாங்கினான்.

ராமைய்யா கடையில், வள்ளிக்கும், ராமுவுக்கும் புது டவுசர், பாவாடை வாங்கினான். இது நாள் வரை ரத்னம் மாமா கொடுத்த பழையது மட்டுமே போட்டுக் கொண்டிருக்கும் ராமுவையும் வள்ளியையும் நினைத்து ஒரு கணம் கண்ணில் நீர் கசிந்தது அவனுக்கு. "இனி ஒரு கஷ்டமும் இல்ல". இப்படி மனசுல நெனச்சுக்கிட்டே ராமைய்யா கிட்ட 150 ரூபா எடுத்து கொடுத்தான்.
லாட்டரி விஷய்ம் தெரிஞ்ச ராமைய்யாவும் "என்னடா கோவிந்தா. உனக்கு ஒண்ணும் வாங்கலியா" ன்னு கேட்டாரு.
"ஓ. எனக்கு அப்பறம் வாங்கிக்கறேன். மொதல்ல பசங்கள பாக்கணும்" என்று ஓட ஆரம்பிச்சான்.
வழியில் பலூன்காரன் கிட்ட 10 பலூனும், கோமதி பாட்டிகிட்ட இரண்டு ஐஸ், தெரு ஓரத்தில் பம்பரம் விற்பவனிடம் பம்பரமும் வாங்கி மூச்சு வாங்க ஓடினான்.

வள்ளி இரண்டு வாரத்துக்கு முன்னால, செருப்பு வேணும்னு கேட்டுச்சு. ஒரு செருப்பு 35 ரூபா கொடுத்த வாங்க முடில. அது ஞாபகம் வந்த ஒடன்ன, செருப்பு கடைய பாத்து அவசரமா ஓடினான். 100 ரூபாய்க்கு அழகா ஒரு செருப்பு வாங்கினான்.
ராமுக்கு அப்படியே ஒண்ணு வாங்கினான்.

எல்லாத்தையும் எடுத்துட்டு வீட்டுக்கு வந்த கோவிந்தன "யப்பா 20 லட்சமாப்பா?. எனக்கு என்னப்பா வாங்கின?" - ஆர்பாட்டம் பண்ணாங்க ராமுவும், வள்ளியும்.

ரெண்டு பேரையும் ரெண்டு தோள்ள தூக்கி வச்சு ஆடினான் கோவிந்தன்.

அங்க இருந்த முருகன் கிட்ட டவுஸர்ல இருந்த மிச்ச ரூபாயில் 300 ஐ எடுத்து கொடுத்திட்டு, "முருகா கடைக்கு போயி உன் பசங்களுக்கும் புது சொக்கா வாங்கி கொடு. கறிகாய் வாங்கி உன் பொண்டாட்டிய சமச்சு போட சொல்லு. நானும் என் பசங்களோட, பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கர ஓட்டலுக்கு போயி சாப்பிடப் போறேன். நாளைக்கு காலேல வந்துடு. நாளிக்கு பாங்க் போய் உனக்கு 2 லட்சம் எடுத்து தரேன்" என்றான்.

முருகன் "ஓ" னு அழ ஆரம்பிச்சுட்டான் இத கேட்ட ஒடன. "கோவிந்தா. சும்மா வெளயாட்டுக்கு தான் சொல்றேன்னு நெனச்சேண்டா" என்றான்.

"டேய் முருகா. நீ எனக்கு பண்ண ஒத்தாசிக்கெல்லாம் முன்னாடி, 2 லட்சம் எல்லாம் என்னடா பெரிய பணம்" என்று கோவிந்தனும் அழுதான்.

முருகன் போனதும், "ராமு, வள்ளி, ரெண்டு பேரும் சட்டுனு குளிச்சுட்டு புது சொக்கா போட்டுக்கங்க. சாப்பிட ஹோட்டலுக்கு போலாம்" என்றான்.

இத கேட்டது ரெண்டு பேரும் சந்தோஷமா "டுர்ர்ர்ர்ர்" னு கற்பனை கார் ஓட்டி தெரு ஓர குழாய்க்கு குளிக்க ஓடினார்கள்.

திடீர் சந்தோஷம் தந்த பதட்டம் இப்பதான் கொஞ்சம் கம்மியாச்சு கோவிந்தனுக்கு.

"ஹப்பா, ஒரு நாள்ள என்னவெல்லாம் நடக்குது. புள்ளயாரே காப்பாத்திட்டப்பா" - இப்படி மனசுக்குள்ள நெனச்சு வீட்டுக்குள்ள இருந்த புள்ளயார் படத்தில் இருந்து விபூதி எடுத்து பட்டயாக பூசிக்கொண்டான்.

குடிசைக்கு வெளியே வந்தான். வெளீல சூரியன் மறைய ஆரம்பிச்சு இருந்தது. அழகா தங்க நெறத்துல வானம் தக தகனு இருந்தது.

கைத்துக் கட்டில்ல மெதுவா படுத்தான். காலேலேருந்து ஓடி ஆடின களைப்புல, கண்ணு ஒடனே சொருகி தூக்கம் வந்துடுச்சு.
பசங்க வரதுக்குள்ள குட்டி தூக்கம் போடலாம்னு தூங்கினான்.

"கோவிந்தா. டேய் கோவிந்தா. எலேய் எழுந்துருடா டேய்" என்று அலறிய குரல் கேட்டு பதறி எழுந்தான்.

"டேய் பரதேசி. இன்னும் என்னடா தூங்கிக் கிட்டு இருக்கர ராஜா மாதிரி. காத்தால 8 மணி ஆச்சு. இன்னும் ஆள காணலியேனு பாத்தா, ஐயா இங்க தூங்கிக்கினு இருக்காரு. தூ. எழுந்து பொழப்ப பாருடா" என்று ரத்னம் மாமா சரமாரியா திட்டினாரு.
ரத்னம் மாமா ஓட்டிட்டு வந்த குப்பை வண்டியின் நாத்தம் கொடலை பொரட்டியது.

வீட்டுக்குள்ளே இருந்து வெளியில் வந்த ராமு, சுவத்துல மாட்டி இருந்த கோணிப்பை எடுத்து தோள்ள போட்டு "யப்பா. போய்டு வரேன். இன்னிக்கு பஸ் ஸ்டாண்ட் கிட்ட தான் சுத்திக்கினு இருப்பேன். இன்னிக்காவது லாட்டரி வாங்காம, வள்ளி பொண்ணுக்கு செருப்பு வாங்கினு வாப்பா" னு சொல்லிட்டு 'வேலைக்கு' கெளம்பிட்டான் ராமு.

"யப்பா, இன்னிக்காவது செருப்பு வாங்கிட்டு வாப்பா" என்று உள்ளே இருந்த கிழிந்த பாவாடையுடன் வள்ளி வந்தா.

வள்ளி யை பாத்ததும்தான் நிதர்ஸனம் உரைத்தது கோவிந்தனுக்கு. லாட்டரி, 20 லட்சம், புது சொக்கா, வள்ளிக்கு வாங்கிய செருப்பு, எல்லாம் வெறும் கனவு என்ற உண்மை புரிந்தது.

கைகள் நடுங்கியது.

"ஐயோ எல்லாமே கனவா. ஆண்டவா" என்று கூறிக் கொண்டு தலையில் அடித்து அழத் தொடங்கினான்.

ஒன்றும் புரியாத வள்ளி, சற்று தள்ளி நின்று பயத்துடன் அவனுடன் சேர்ந்து அழுதாள்.

ரத்தினம் மாமா குப்பை வண்டியுடன் காத்துக் கொண்டிருந்தார்.


----- 0 - முற்றும் - 0 ----- 0 ----- 0 ----- 0

-BadNewsIndia

26 comments:

said...

btw, இலவசம் னு தலைப்ப கதைல எங்கேயும் போடலியேனு ஒரு உருத்தல் இருக்குது.

ஆனா, கதைக்கு தலைப்பு 'கனவுகள் இலவசம்னு' வச்சுட்டா சுவாரஸ்யம் குறைஞ்சிடலாம்னுதான் அப்படி வெக்கல.

;)

said...

கதையை படிக்கும் அன்பு உள்ளங்கள், இந்த பதிவை படித்து ஸ்வேதா என்ற குழந்தைக்கு முடிந்ததை செய்யுமாறு இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்வேதா

Anonymous said...

பாவம் கன்வு என்ற உடனே என்க்கும் மிகவும் வருத்தமாக இருந்தது ,,,,,தன்
உழைப்பே நாண்யத்துடன்
செய்தால் லாட்டரி வாங்கத் தேவையே இல்லை
தானகவே உயர்வு கிடைக்கும்,,,,,,,அன்புடன் விசாலம்

said...

கருத்துக்கு நன்றி விசாலம்!

//பாவம் கன்வு என்ற உடனே என்க்கும் மிகவும் வருத்தமாக இருந்தது //

அதை தானே எதிர்பார்த்தேன். ;)

said...

//பாவம் கனவு என்ற உடனே எனக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது //

இந்த மாதிரி தினம் தினம் கஷ்டப்படுகிறவர்களுக்கு சுகமான கனவு கூட வராது என்று எங்கேயோ படித்திருக்கிறேன். உண்மையானு தெரீல.
உண்மையாத்தான் இருக்கும். சில சமயம் வருத்தங்கள் இருக்கும்போது தூக்கம் கூட வராதே. கனவு எங்கேருந்து வரப்போவுது.

said...

நல்லா போயிட்டு இருந்த கதையை, டக்குன்னு கனவுன்னீட்டீங்களே...

said...

வருகைக்கு நன்றி நெல்லை சிவா.

என்னங்க பண்றது. ரொம்ப இழுத்தா கனம் கொறஞ்சுடுமேன்னுதான் டக்குனு முடிச்சுட்டேன்.

கருத்துக்கு நன்றி!

said...

சூப்பர் தல :)
அசத்திப்புட்டீங்கொ,எத்தனைபேர் இப்படி லாட்டரியை நம்பி குடும்பத்தினை நாசம் செய்துவருகின்றனர்? அவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்.
ஸ்ரீஷிவ்..

said...

srishiv,

வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி!

//அசத்திப்புட்டீங்கொ,எத்தனைபேர் இப்படி லாட்டரியை நம்பி குடும்பத்தினை நாசம் செய்துவருகின்றனர்? அவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்//

பாடமாக அமைந்தால் சந்தோஷமே!!

Anonymous said...

Nice story and well written.

said...

அனானி, ரொம்ப நன்றி!

said...

அத்தனையும்கனவா? அப்படி உணர முடியாதபடி கதைப்போக்கு நல்லா இருந்தது ஜெயன். கண்டிப்பா இதுக்கு பரிசு கனவாகாமல் இருக்க வாழ்த்துகள்!
ஷைலஜா

said...

ஷைலஜா, குற்றாலம் மாதிரி உங்கள் கற்பனை ஊற்று பெருக்கெடுத்து தினம் ஒரு கவிதை தரீங்க.
உங்கள் லெவலில் போட்டியிட்டு பரிசாவது ஒண்ணாவது.
சும்மா பார்டிசிபேஷனுக்காக எழுதியது. அவ்வளவே!

நல்லா இருந்துன்னு சொல்றீங்க. ரொம்ப சந்தோஷம். லாஜிக் சொதப்பல் இல்லாம எழுதினது எனக்கும் சந்தோஷமே.

Anonymous said...

Wow! really great story.

excluding the spelling issues story is written like a professional.

said...

அனானி,

நெஜமாவா சொல்றீங்க.

நீங்க சொன்னா சரிதான் ;)

said...

//ஷைலஜா, குற்றாலம் மாதிரி உங்கள் கற்பனை ஊற்று பெருக்கெடுத்து தினம் ஒரு கவிதை தரீங்க.
உங்கள் லெவலில் போட்டியிட்டு பரிசாவது ஒண்ணாவது.
சும்மா பார்டிசிபேஷனுக்காக எழுதியது. அவ்வளவே!//

ஹலோ ஜெயன்..இதெல்லாம் டூமச்! நான் பலவருஷமா எழுதறேன்.. நீங்க எழுதவந்த உடனேயே அசத்தறீங்க..பரிசைவிட பங்களிப்புதான் முக்கியம் ஜெயன். அதுதானே அனுபவமாகும்? மனம் நிறைந்த வாழ்த்து மறுபடி
ஷைலஜா

said...

ஷைலஜா,

வாழ்த்துக்கு நன்றி!

பங்களிப்பே பரிசுதான் எனக்கு.

said...

ஆப்பு, வருகைக்கு நன்றி!

//உங்கள் பதிவு சூப்பர்//

ரொம்ப நன்றி!

-BNI

Anonymous said...

romba nalla kadhai.
best wishes.

said...

~ஆப்பு~

//உங்கள் பதிவு சூப்பர். //

ada,neengadhaan andha 'personal attack' seibavaraa?
theriyaama pochche.
sorry, unga comment 'delete' pannidaren.

irundhaalum, mele sonna ungal paaraattukku romba nanri.

enga ippadi ellaam? ungallukku pidikkaadha onna yaaravadhu ezhudhinaa comments moolamaa sollunga. illa badhil padhivu podunga. adha vittuttu... ippadiyellaam yen?

Anonymous said...

SAAKKADA ezudharavana pathi summaa ezudhi ezudhiye naraya peru sambaadhikkaraan. saakkada alvaranukku enna kedaikkudho. karumam naaththam dhaan michcham.

said...

அனானி, என்ன சொல்ல வரீங்க?

சாக்கட அள்ரவன் கஷ்டத்த எழுதினாதானே a/c ல ஜம்முனு உக்காந்து வேல செய்றவனுக்கும் அவன் கஷ்டம் தெரியும் ?

said...

ஏழைகளுக்கு விடிவு என்பது இப்படி நிகழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நீங்கள் கனவு என்றதும் அப்பாடா என்றிருந்தது. இல்லையெனில் இக்கதை லாட்டரி சீட்டு பழக்கத்தை மறைமுகமாக ஆதரிக்கும் அபாயம் உள்ளது.

எழுதியதைப் பொருத்தவரையில் நன்றாக இருக்கிறது.

said...

ஓகை, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//ஏழைகளுக்கு விடிவு என்பது இப்படி நிகழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நீங்கள் கனவு என்றதும் அப்பாடா என்றிருந்தது. இல்லையெனில் இக்கதை லாட்டரி சீட்டு பழக்கத்தை மறைமுகமாக ஆதரிக்கும் அபாயம் உள்ளது.
எழுதியதைப் பொருத்தவரையில் நன்றாக இருக்கிறது.//

கனவுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கையில் இலவசம் என்ற கருத்தை வைத்து எழுதிய கதைதான் இது. அப்படியே லாட்டரி (gambling) வாங்கி பணம் விரையம் செய்பவர்களுக்கும் ஒரு சின்ன பாடம் சேர்க்கப்பட்டது.

உழைப்பு மட்டும் தான் உயர்வுக்கு வழி. நம்மை சுற்றி நிகழும் பல நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் இதைத்தான் காட்டுகின்றன.

(கொள்ளை அடிக்கும் அரசியல் வாதியும், ஈஸியா அந்த இடத்துக்கு வந்திடலயே :) )

Anonymous said...

CHA KANAVAA ELLAAM. SOGAP PADUTHTHITEEENGALE.

said...

அட, நமக்கும் கணிசமான ஓட்டு விழுந்திருக்கு.

சந்தோஷம்.

வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.