Sunday, November 26, 2006

அவசர சந்திப்பு - கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த், வை..(2)



இதன் முதல் பாகத்தை இங்கே படிக்கவும். (அதை படிச்சுட்டு இத படிங்க. இல்லன்னா continuity போயிடும். ஒண்ணும் புரியாது. அப்பறம் examla திரு திருனு முழிக்க வேண்டியதாயிடும் :) )

அவசர சந்திப்பு - பாகம் ஒண்ணு
...
தொண்டையை adjust பண்ணியபடி கருணாநிதி பேச ஆரம்பிக்க எல்லாரும் அமைதியாக கேட்க ஆரம்பித்தனர்.

அனைவருக்கும் இளநீர், காபி, டீ வழங்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு flask'ல் இருந்து பாதாம் பால் எடுத்துக் கொடுத்துக் கொடுத்தார் சசி.

'லூசுப் பெண்ணே' என்று பி.ஜெ.பி கணேசனின் செல்-போன் திரும்ப சிணுங்கியது. எல்லோரும் அவர் பக்கம் திரும்பி முறைக்க, அசடு வழிந்து கொண்டே செல்-போனை அணைத்து உள்ளே வைத்தார்.

கருணாநிதி பேச ஆரம்பித்தார் "அன்பார்ந்த கழக நிர்வாகிகளே, கூட்டணி நண்பர்களே, எதிர் கட்சி தலைவர்களே, வணக்கம். அழைத்தவுடன் வந்தமைக்கு நன்றி. (சசிகலாவை பார்த்து)அழைக்காமல் வந்தமைக்கு வந்தனம். சேரன், சோழன், பாண்டியன் என்று செங்கோல் பூண்டு ஆட்சி செய்த மன்னர்கள்"...

"I object" என்று விஜய்காந்த் குரல் கொடுத்து மேசையை தட்டினார்.
தட்டிய தட்டில், ஜெயலலிதா குடித்துக் கொண்டிருந்த சூடான பாதாம் பால் மேசையில் கொட்டி வைகோவின் முகத்தில் தெறித்தது. எரிச்சலில் ஓ என்று கத்தினார் வை.கோ.

"என்ன வை.கோ, planned execution மாதிரி தெரி்யுது. அம்மா வேணும்னே சான்ஸ் கடச்ச உடனே, பால் எடுத்து உங்க மேல கொட்டிட்டாங்களோ" என்று மெதுவாக வை.கோவின் காதில் ஓதினார் ராமதாஸ்.

'ச ச, அதெல்லாம் இல்ல தாஸ்,accidents happen. இது கை தவறி நடந்ததுதான். பு.தலைவி அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க. விஜய்காந்த் வேணும்னா, ஏதாவது மனசுல வச்சு இப்படி தட்டி இருக்கலாம். அவர வேணா கேட்டுப்பாருங்க", என்று வை.கோ திரும்ப ஓதினார்.

தான் பேசும்போது 'object' சொன்ன விஜய்காந்தை பார்த்து, கடுப்பான கருணாநிதி, "ஏய்யா விஜயகாந்து, என்னய்யா objection உனக்கு? இன்னும் நான் பேசவே ஆரம்பிக்கல, அதுக்குள்ள என்ன ஆச்சு உனக்கு" என்றார்.

"அதில்ல CM sir, இங்க இருக்கறது நம்ப மட்டும் தான். நீங்க என்னுமோ பொதுக்கூட்டத்துல பேசுர மாதிரி, தூய தமிழ்ல அடுக்கிக்கிட்டே போறீங்க. பல்லவன், சோழன் எல்லாம் பேசாம, சொல்ல வந்தத சீக்கிரம் சொன்னீங்கன்னா, கேட்டுட்டு shooting போவேன். அதுக்குத்தான் object போட்டேன்" என்று கட்டைக் குரலில் விஜய்காந்த் பதிலினார்.

கணேசன் இதை கேட்டவுடன், தானும் மேசையை தட்டி, "எனக்கும் ஜவுளி கட திறக்க தாம்பரம் போகணும். விஜய் சொல்ற மாதிரி சட்டுனு பேசி முடிச்சீங்கன்னா, நல்லா இருக்கும்" என்றார்.

மற்றவரும் இதை ஆமோதிக்க, அன்பழகன், கருணாநிதியின் script ஐ எடுத்து கீழே போட்டார். "கருணா, எல்லாரும் சொல்றது சரிதான் எழுதி வச்சத படிக்காம, மனசுல பட்டத அப்படியே சொல்லு. இப்பெல்லாம் தூய தமிழ்ல நீ பேசினா கேக்கர மக்களுக்கு ஒரு எரிச்சல் வருதுனு loyola தாடிக்காரர் survey எடுத்து சொன்னது சரிதான் போல" என்று கருணாநிதியின் காதில் கிசுகிசுத்தார்.

"You too அன்பு" என்பது போல் அன்பழகனை ஒரு பார்வை பார்த்து, "சரிப்பா நீங்க சொல்றது சரிதான். சொல்ல வந்தத சொல்றேன் கேளுங்க" என்று பேச ஆரம்பித்தார் கருணாநிதி.

"எனக்கு வயசாவுது. தமிழனுக்காக உழைச்சு 70 வருஷத்துக்கு மேல ஆச்சு. என் மொத்த வாழ்க்கையும் தமிழனின் நலனுக்கு மட்டும் தான் அற்பணிச்சிருக்கேன். அண்ணா காட்டிய வழியில் இவ்ளோ நாள் பயணிச்சாச்சு. மக்களுக்காகவே இவ்வளவு நாள் வாழ்ந்தும், இன்னும் பலர் நான் என்னமோ அவங்கள ஏமாத்திட்டதாகவும், பலரின் பட்டினிக்கு நான்தான் காரணம் என்ற ரீதியில் பேசிக்கராங்க.
மனசு அளவுல யாருக்கும் கெடுதல் நெனச்சதுல்ல நான். என் தமிழனின் வாழ்வு வளம் பெறணும் என்ற ஒரே எண்ணம் தான் என் எல்லா முடிவுகளிலும், திட்டங்களிலும் இது நாள் வரையில் இருந்திருக்கு.
இடயில், சில, பல பல சுய லாபங்கள், நானும், என் குடும்பத்தாரும் அடைந்திருக்கலாம்.
என்ன பண்றது, நல்லவனா இருந்தா மட்டும் போதாதே, பண பலமும், படை பலமும் இல்லன்னா இங்க அரசியல் பண்ண முடியாத மாதிரி சூழல் உருவாக்கி வச்சிருக்கமே.

இன்று ஊழல் பெருகவும், கயமை உருவாகவும், சுய நலம் பொது நலத்தை மீறவும், இந்த அரசிய சூழல் தான் காரணம்.

கொஞ்ச நாளுக்கு முன் என் பேரனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவன் பாடத்தில் epitaph என்று ஒரு கவிதைத் தொகுப்பு. உயிருடன் இருக்கும்போதே பிரபலங்கள் பல தங்கள் கல்லரையில் எழுதி வைக்கச் சொன்ன வாக்கியங்கள் தான் epitaph.
அதில் கருத்தாழமிக்க ஒன்று ஒரு போர் வீரனுக்காக எழுதியது
To save your world you asked this man to die:
Would this man, could he see you now, ask why?


என் கண்ணை திறந்த இரு வரிகள் இவை. என்னையும் என் கட்சியையும் இது நாள் வரை ஆதிரித்து, கேட்க்கும் போதெல்லாம் வாக்களித்து, எனக்காக உயிரையும் விட்டவர் பலர். நான் இறந்த பின் இவர்களை எல்லாம் காண நேரிட்டால், இவர்களின் கேள்விகளை எப்படி எதிர் கொள்வேன்?
பல முன்னேற்றங்களை என் தமிழ் நாட்டுக்கு நான் செய்திருந்தாலும், இன்னும் பல இடங்களில் பசியும், பட்டினியும், சுகாதாரமும், சாதிக் கலவரமும் கணக்கிலடங்காமல் பெருகிக் கிடக்கிறதே.
இவையெல்லாம் போக்க ஒரு தீர்க்கமான திட்டம் இது நாள் வரையில் தீட்ட முயற்ச்சி மேற்கொள்ளாமல், என் 70 வருட பொதுவாழ்வு வீணாய் போனதோ என்ற திடீர் கலக்கம் எனக்கு."

மடமட என பேசிய கருணாநிதி கண்கள் கலங்க மௌனமானார்.
இதைக்கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்களும் திகைத்துப் போய் கருணாநிதியை பார்த்தனர்.

"என்ன புதுவிதமான ஸ்டண்ட்டா இருக்கே. எதுக்கு இப்படி அடி போடறாரு" என்று வை.கோ ராம்தாசின் காதில் கிசுகிசினார்.
தயாநிதி, கண்கள் கலங்க அன்பழகனின் தோளில் சாய்ந்தார். "டேய் படம் காட்டாத, சும்மா இரு" என்று அன்பழகன் சொன்னதும் எழுந்து தள்ளி நின்றார்.

"Ok ok. So, what?" என்று ஜெயலலிதா கேள்வி கேட்டார்.
கேள்வி கேட்ட ஜெயலலிதாவை பார்த்து ஷ்ஷ்ஷ் என்றார் அன்பழகன்.
எழுந்து போகப்பார்த்த சசிகலாவை பிடித்து அமர்த்தினார் ஜெயா.

"Mr. கருணாநிதி, இப்பவாவது தப்ப ஒப்புக்கொண்டீர்களே. அப்படியே, என் கல்யாண மண்டபம் இடிப்பதும் தப்புதான்னு இது கூட சேத்து, எல்லாத்தையும் மொத்தமா ஒரு பெரிய அறிக்கையா நாளைக்கு கொடுத்துடலாம் சார். அப்ப நீங்க ராஜினாமா பண்ண போறீங்களா?" என்று வாயெல்லாம் பல்லாக விஜயகாந்த் கேள்விகளை அடுக்கினார்.

"தம்பி விஜய்காந்து, சினிமால நடிச்சு பேரும் புகழும் சம்பாதிச்சு, அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம நிக்கும் போது, உனக்கு மக்கள் மேல அக்கரை வந்திருக்கு தம்பி. நான் பிறந்தவுடன் என் தமிழனுக்கு என் வாழ்வை அற்பணித்தவன். ரெண்டு படம் ஓடலன்னா, உன் நிலை இப்படியே இருக்குமான்னு தெரியாது. என் கதை அப்படியல்ல. மரணப் படுக்கை வரை என் தமிழனுக்கான போராட்டம் தீராது. சும்மா சத்தம் போடாதே. அமர்" என்று கடுப்பானார் கருணாநிதி.

"சரி சரி CM சார், சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன். மேல சொல்ல வந்தத சட்டுனு சொல்லுங்க தலைவரே" என்று அசடு வழிந்தார் விஜய்காந்த்.

ஜெயலலிதாவுக்கு, பாதாம் பால் இன்னொரு கப் ஊற்றிக் கொடுத்தார் சசி. ஜெயலலிதா மிகவும் குழம்பியவராய் காணப்பட்டார்.

"இன்னும் இருக்கப் போறது கொஞ்ச வருஷம்தான். அதுக்குள்ள என்னால் முடிஞ்ச வரை, எழைகள் வாழ்வில் வளம் ஏற்றவும், என் தாய் தமிழகம் ஒளி பெறவும் ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணேன்.
பல வருடங்கள் நானும், நண்பன் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மையாரும் மாறி மாறி ஆட்சி செய்தோம். ஒரு பெரிய முன்னேற்றமும் கொடுக்கவில்லை நாங்கள். (ஜெயலலிதா ஏதோ பேச எழ, பேசாமல் அமரச் சொன்னார் கருணாநிதி).
எம்.ஜி.ஆர் நல்லவன். பல கனவு அவனுக்கு இருந்தது. ஏழைகளே இருக்கக்கூடாது அவன் ஆட்சியில் என்று எண்ணினான்.
ஆனால், எங்கள் இருவருக்கு இடையில் இருந்த நட்பை விட, பெறுகி இருந்த ஈகோவும் காழ்ப்புணர்ச்சியும், ஒருவரை மற்றொருவர் தாழ்த்தி, ஒரு நல்லதும் செய்ய விடாமல் செய்தது.
அவரவர் பணபலமும், படை பலமும் பெருக, ஆட்சியில் இருக்கும்போது, லஞ்சமும் கயமையும் பெறுகியது.
மற்ற முக்கிய பிரச்ச்னைகளில் கவனம் செலுத்த முடியாமல், ஆட்சியை பிடிப்பதிலும், காப்பதிலுமே நேரம் விரையமானது.
அவனுக்கு பிறகு வந்தவர்களும், இதைத் தொடர்ந்து, மொத்த கூட்டமும் பொது முன்னேற்றத்திர்க்கு வழி பண்ணாமல், சுய முன்னேற்றமும், தன் சுற்றத்தின் முன்னேற்றமுமே பேண முடிந்தது.

எல்லா நிலைகளிலும் லஞ்சம் பெறுகியது. கட்சிக்கு ஆதாயம் என்பதால், கேள்விகள் பல கேட்கப்படாமல் மௌனமாக நம் தமிழகம் அழிந்து கொண்டு வந்திருக்கிறது.

விவசாயியை எல்லோரும் மறந்தோம். தேர்தல் சமயத்தில் மட்டும், சில சலுகைகள் கொடுத்து ஓட்டு வாங்குவதில் மட்டுமே நம் கவனம் இருந்தது. கொடுத்த சில சலுகைகளும் அவனுக்கு சேர்கிறதா என்று சரி வர கவனிக்காமல், பல குடும்பங்கள் பலியாக காரணமானோம்.

வரிப்பணத்தில் செய்யும் பல வேலையிலும் லஞ்சம் புகுந்து பலருக்கு பெரும் துயர் ஏற்பட வழி வகுத்தது. மழையில் பல் இளிக்கும் சாலை, வெயிலில் தண்ணீர் பஞ்சம், விவசாயிக்கு கிடைக்க வேண்டிய வசதி கிடைக்காதிருத்தல், உணவு/மருந்து பற்றாக்குறை, பேருக்குக் கூட சுகாதார வசதி இல்லாமல் பல இடங்கள், அரசியல் லாபத்துக்காக மூடப்படும் சாதி சண்டைகள், கல்வி கிட்டாத பல குழந்தைகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதில், அறிந்தும் அறியாமலும், என் பங்கும் உண்டு.
"

என்று மூச்சு முட்ட கர கரத்த குரலில் பேசினார் கருணாநிதி.

"என்ன சார் அப்பா இப்படி கவுக்கராரு. போற போக்க பாத்தா, எல்லாத்தையும் மக்களுக்கு எழுதி வச்சு எனக்கு துண்டு கொடுத்துடுவார் போல இருக்கே" என்ற ஸ்டாலின், அன்பழகனிடம் "கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க சார் அவர" என்று கூறினார்.

கணேசன் பேச ஆரம்பித்தார் - "நீங்க சொன்னதத்தான் தேர்தல் சமயத்துல நானும் கிராமம் கிராமமா போய் கத்தினேன். ஒரு பயலும் கேட்ட மாதிரி தெரியலையே. திரும்ப உங்களுக்குதான் ஓட்ட போடறான். மயக்கி இல்ல வச்சிருக்கீங்க ரெண்டு பேரும். ரெண்டு டி.வி ஸ்டேஷன் வச்சுக்கிட்டு மக்கள மாத்தி மாத்தி ப்ரெய்ன் வாஷ் இல்ல பண்றீங்க. போதா கொறைக்கு ராமதாஸ் வேற இன்னொரு டி.வி ஆரம்பிச்சிட்டாரு. என்னதான் முடிவு இதுக்கெல்லாம்?"

"கணேசன். நாங்க இவ்ளோ வளரலன்னா இந்நேரம் ராம் டி.வி யோ, கை டி.வி யோ வந்து, என் மொத்த மக்களையும் இல்ல வசியம் பண்ணி அறியாமைல தள்ளி இருக்கும். உக்காருங்க. உக்காருங்க." என்று அன்பழகன் கணேசனை அமரச் சொன்னார்.

"கருணா, ராகு காலம் ஆரம்பிக்கப் போவுது, நேத்து தீட்டின திட்டத்தோட print-out எடுத்து எல்லாருக்கும் கொடுத்து, நம்ப எடுத்த முடிவ சீக்கிரம் சொல்லுப்பா" என்று கருணாநிதியை பார்த்து அன்பழகன் சொன்னார்.

"சொல்றேன்பா. ஸ்டாலின், இந்த பேப்பர எல்லார் கிட்டயும் கொடு. இயற்கை அழைக்கிறது. 1 வேலைய முடிச்சுட்டு வரேன். நீங்களும் ஒரு short-break எடுத்துட்டு சீக்கிரம் வந்துடுங்க. தம்பி விஜய், shooting க்கு கலம்பிடாதப்பா, நமீதாவ வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வர சொல்லு. முக்கியமான விஷயம் இனிதான் இருக்கு. கவனமா எல்லாரும் கேக்கணும்" என்று உள்ளே சென்றார். கீழே விழுந்த மஞ்சள் துண்டை எடுத்துக் கொண்டு பின்னேயே ஓடினார் தயாநிதி. "Uncle" என்று கத்தியபடி....

..தொடரும்.


பி.கு: எல்லாம் உடான்சே, உடான்சை தவிர வேறொன்றுமில்லை..



.

3 comments:

Anonymous said...

ஹி ஹி ஹி

said...

/********************************
இன்னும் இருக்கப் போறது கொஞ்ச வருஷம்தான். அதுக்குள்ள என்னால் முடிஞ்ச வரை, எழைகள் வாழ்வில் வளம் ஏற்றவும், என் தாய் தமிழகம் ஒளி பெறவும் ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணேன்.
********************************/

அதுக்கு தி.மு.க வை கலைப்பது தான் நல்லது.


தல, பிண்றீங்க.

said...

வென்கட்ராமன், வாங்க வாங்க.

மொத்த அரசியல் அமைப்பையும் மாத்தி அமைக்கணும். அப்பதான் உண்மையான முன்னேற்றம் வரும்.