Monday, September 24, 2007

ஜெய் ஸ்ரீராம்! உடைத்தெறிவோம் பாலத்தையும், சூட்சிகளையும்!

தையோ, காவியமோ, சரித்திரமோ, ஏமாற்றும் தந்திரமோ, எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.
டவுள் பலமுறை அவதரித்திருக்கிறான், ஒவ்வொருமுறையும் ஒரு குணாதசியத்தை வெளிப்படுத்தி, அதன் மூலம் மக்களுக்கு சில செய்திகளை சொல்லிச் சென்றிருக்கிறான், என்று வைத்துக் கொள்வோம்.

அவதாரங்களில் ஒன்று ராம அவதாரம். மனிதனாய் எடுத்த அவதாரம்.
மந்திரஜாலம் செய்யும் திறமை எல்லாம் இல்லாமல், சாதாரண மனதினாய் அவதரித்து, நம்மைப் போல் வாழ்ந்து, நாம் படும் இன்ப துன்பங்களை அனுபவித்து, அதன் மூலம், நல்லவை அல்லவைகளை புரிய வைக்க, கடவுளை ராமனாய் சித்தரித்து பல கதைகள்.

தந்தை சொல் தட்டாத நல்ல மகன்,
தம்பிமார் மேல் பாசம் கொண்ட நல்ல அண்ணன்,
பழகுவோர்க்கெல்லாம் நல்ல நண்பன்,
ஏக பத்னி வ்ரதன்,
இன்று போய் நாளை வா என்ற பெரும் குணம் கொண்ட நல்ல எதிரி,
என்று இவன் நற்குணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதே போல்
மனைவியை சந்தேகித்த அற்பன்,
மறைந்திருந்து வாலியைக் கொன்ற சூட்ச்சிக்காரன்,
சுயநலத்திர்க்காக பெரும் போர் தொடுத்து பல உயிர் மாய்த்தவன்,
என்றும் இவன் தீய குணங்களாகக் காட்டப் படுவதை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாரதர் சொல்லி வால்மீகி எழுதி, இடையில் பலரும் பலவேறு கதைகளை பல்வேறு கால கட்டங்களில் நுழைத்து, கம்பனை போன்ற பல கவிஞர்கள் கற்பனையில் வரையப்பட்டு, இராமாயணம் ஒரு பெரிய காவியமாக உருப்பெற்றுள்ளது.

அதில் கூறப்பட்டதையெல்லாம் உண்மை என்று கண்மூடித்தனமாக நம்பும் ஒரு கூட்டமும் உண்டு. என் பாட்டி உள்பட.
தினமும் மாலை, ராமாயணத்திலிருந்து ஒரு பாடலை ஜெபித்தால், புண்ணியம் என்று, விளக்கு வைத்ததும், ராமாயணப் புத்தகத்தை தொட்டுக் கும்பிட்டு, ஒரு பாடலை வாசித்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்.
அதை ராகத்துடன் வாசிப்பதைக் கேட்க நன்றாய்த்தான் இருக்கும்.

ஒரு கதை நாயகனை கடவுள் என்று நம்பவைத்தது பெரிய விஷயம் தான். அந்த நம்பிக்கையில் பல்லாயிரம் ஆலயங்களும் பலகோடி பக்தர்களும் ராமனின் புகழ் பாடுவது ஆச்சரியமாய்த் தான் இருக்கிறது.
பலருக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும், சிலருக்கு வாழ்க்கையும் தரும் ராமன் ஒரு மகா அவதாரம் தான்.

ராமன் கடவுள் தான் என்ற நம்பிக்கை ஒரு புறம் இருந்துவிட்டுப் போகட்டும். ராமாயணக் கதையில் வரும் சம்பவம் அத்தனையும் நடந்தது என்று நம்புவது மடமை அல்லவா?

இலங்கையில் பத்து தலை கொண்ட ராவணன் இருந்தானா?
வானரப் படைகள் இருந்தனவா?
அனுமன் மலையைப் பெயர்த்துக் கொண்டு பறந்து சென்றானா?
சீதா மண்ணுக்குள்ளிருந்து குழந்தையாய்க் கிடைத்தாளா?

இதை எல்லாம் கூட நடந்ததாய் நம்புகிறீர்களா? அப்படி நம்புவது கற்றவர்களுக்கு அழகா?

வானரப் படை கல்லைத் தூக்கிக் கடலில் போட்டதாம், கல் மேலே மிதந்ததாம், அதில் நடந்து இலங்கைக்குச் சென்றார்களாம். கதாசிரியரின் கற்பனனயை பாராட்டலாம்.
ராமர் மேற்பார்வையில் கட்டிய பாலம் இன்னும் இருக்கிறதாம். அதை அழிக்கக் கூடாதாம். ஒரு கூட்டம் கொக்கரிக்கிறது.
ராமர் கடவுள் என்ற நம்பிக்கை உண்டா அந்த கூட்டத்துக்கு? கடவுள் வெறும் பாலம் மட்டுமா கட்டினார்?
உலகைப் படைத்ததும், அதில் உள்ள அனைத்தையும் படைத்ததும் ராமன் தானே?

நாட்டுக்குள்ளே உள்ள அனைத்து வனங்களும் அழிக்கப் படுகின்றன, கங்கையில் சாக்கடை கலக்கப் படுகிறது, மனிதனை உயிருடன் எரித்து காட்டுமிராண்டித்தனம் செய்கிறார்கள், பட்டினி கிடந்தே பல்லாயிரம் மக்கள் இறக்கிறார்கள் - இதையெல்லாம் தடுத்து நிறுத்த முதலில் யத்தனிக்க வேண்டாமா?

ஓட்டுப் பொறுக்கிகளாய் மட்டுமே இருக்கும் இந்த அரசியல் வாழ்க்கையில் எப்பொழுதுதான் மாற்றம் வரும்?

எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மணல் திட்டை காக்க ஏன் இவ்வளவு நேர விரையமும் உயிர் பலியும்?
கால்வாய் கட்டினால் பொருளாதாரம் உயரும், பலருக்கு வேலை வாய்ப்புக் கிட்டும் என்கிறார்களே? நடந்தால் நன்மைதானே?

பனாமா கால்வாய் கட்ட 20000 உயிர்கள் பலியானதாம். பல கிராமங்களும், வனங்களும் மூழ்கிப் போனதாம். ஆனால், இன்று செழிப்பான வளமையுடன், பொறுளாதார வளர்ச்சி பெற்று நன்றாகத்தானே இருக்கிறார்கள் அவர்கள்.

83 கோடி பேர் ஒரு வேளை உணவுக்கு வழி இல்லாமல் இருக்கும் அவலம் நம்மூரில். யாரையும் முன்னேர விடாமல் தடுக்கும் இந்தக் கயமை ஏன்?
எப்பொழுது அடங்கும் இவர்களின் சுயநல வெறி? அடுத்த சந்ததியாவது உருப்படும் என்ற ஆசையும், இந்த வீணர்களின் பொறுக்கித்தனங்கள் கண்டு, மங்கிக் கொண்டே வருகிறது.

திருந்துமா ஜென்மங்கள்?

0 மத்திய அரசும்,மாநில அரசும், நீதி மன்றங்களும், வல்லுநர்களும், ஒன்றாய் செயல் பட்டு, சேது கால்வாய் திட்டத்தின் நல்லவை கெட்டவைகளை ஆராய்ந்து, சடுதியில் இதை முடிக்க பாடு படவேண்டும்.

0 ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். ஐந்து முறை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு ஆட்சியில் அமர்ந்தவர். பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகள் தெரிந்தும், குதர்க்கமாக வார்த்தை ஜாலம் செய்யும் மடமையைக் கைவிடவேண்டும். ஏதோ ஒரு முலையில் இருக்கும் குப்புசாமி அல்ல இவர். தோன்றுவதையெல்லாம், வாயிலிருந்து உதிர்த்து விட. திருக்குறள் தெரியாதவரா? சொல்லின் சக்தி தெரிந்தவர்தானே? பொறுப்பாக நடக்க வேண்டும். உயிர் சேதங்கள் விளைவிக்கும் வீண் வார்த்தை ஜாலம் இனியாவது தவிர்க்க வேண்டும். வயதுக்கேத்த பக்குவம் பேசுவதில் வேண்டும்.

0 காற்றிலிருந்து அமிர்தமே பிரித்து எடுத்து ஏழைக்குப் பசியார கொடுத்தாலும், எதிர்கட்சி செய்வது குற்றமே என்று ஓயாமல் கூப்பாடு போடும் ஓட்டுப் பொறுக்கிகள் ஒழிய வேண்டும். அன்று தான் உண்மையான ராம ராஜ்யம் ஏற்படும்.

0 ராமர் பெயரைச் சொல்லி, ஆட்சியைப் பிடிக்க எண்ணும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம். ராம ராஜ்யம் ஏற்படுத்த ராமருக்கு கோயில் கட்டியும், ராமர் கட்டாத மண் மேடையைக் காப்பாற்றினாலும் மட்டும் போதாது. ஐந்தாண்டு கால ஆட்சி கிடைத்ததே? இந்த வைராக்கியங்களை லஞ்சம் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவதில் காட்டியிருக்கலாமே? செய்தீர்களா? கர சேவை என்ற பெயரில் காட்டிக் கூட்டிய பயங்கரவாதமே இன்னும் நினைவில் இருந்து அகல வில்லை. அதற்குள், மணல் மேடைக் காக்க வரிந்து கட்டிக் கொண்டு போடும் காவி வேஷம். தூ. வெட்கம் வெட்ட பிழைப்புவாதிகளே. ராமன் பெயரைச் சொல்லி கிராமங்களுக்கு சென்று கல்வி சொல்லித் தாரங்கள். குஷ்ட ரோகிகளுக்கு சேவை செய்யுங்கள். புண்ணியம் கிட்டலாம். ஆசிரமத்துக்குள் இருந்துகொண்டு தொப்பையை வளர்த்து வாய்ச்சவடால் விடுவது உடலுக்குக் கேடு. உங்களால் எங்களுக்கும் கேடு.

0 மூன்று மாதங்களில் போட்டு முடிக்க வேண்டிய ஒரு சின்ன சாலையைப் போட்டு முடிக்க மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டு. 4 லட்சம் செலவு செய்ய வேண்டிய வேலையை, 3 கோடி செலவு செய்தும் சரியாகச் செய்யாமல், பாதிக்கும் மேலான பணத்தை திருடித் தின்னும் கூட்டத்தின் நடுவில், இவ்வளவு பெரிய கால்வாய்த் திட்டம் சரிவர செய்து முடிக்கப் படுமா என்ற பெரிய கேள்வி என் மனதுள் எழாமல் இல்லை. திருடித் தின்னுங்கள். சுரண்டித் தின்னுங்கள். ஆனால், எப்படியாவது, மக்களுக்கு வேண்டியதைச் செய்தும் முடியுங்கள்.

0 கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் (நான் உள்பட) ஒன்றை மனதில் கொள்ளுங்கள். ராமனே அந்தப் பாலத்தைக் கட்டியிருந்தாலும், மக்களுக்கு நல்லது நடக்க, அதை வெடி வவத்துத் தகர்த்தாலும், ராமன் யாரையும் தண்டிக்க மாட்டான். அப்படி தண்டித்தால், அவன் கடவுள் இல்லை. ஓட்டுப் பொறுக்கிகளை விட கேவலமான நிலையை அடைவான்.

0 பத்து அவதாரம் தான் கடவுளுக்கா? பத்துக்குப் பிறகு விடுமுறையில் இருக்கிறாரா கடவுள்? பதினோரு அவதாரமாய் எமக்கும் எம்மக்களுக்கும் ஒரு நேர்மையான, சுய நலம் இல்லாத தலைவன் கிட்ட வேண்டும்.

0 ராமனைப் பற்றிக் கேவலமாய் எழுதும் பதிவர்கள் கவனத்தில் கொள்ளுங்கள். ராமனை விரும்பும் பல கோடி மக்கள் உங்கள் மத்தியில் இருக்கிறார்கள். ராமன் அயோக்கியன் அல்ல. அவன் பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் பேடிகள் தான் அயோக்கியர்கள். தன் தந்தையையும் தாயையும் பழிக்கும்போது எழும் வேதனை, தன் கடவுளைப் பழிக்கும்போது சிலருக்கு எழும். அடுத்தவர் மனதை புண்படுத்தும் எழுத்துக்கள் எழுதவா படித்தீர்கள்? பகுத்தறிவை அழகாய் சொல்லத் தெரியவில்லையா உங்களுக்கு? அழகாய் அனைவருக்கும் புரியும்படி சொன்னால்தான், உங்கள் கருத்து பரவும், வாசிக்கப் படும். வீண் சவடால் எழுத்துக்கள் எரிச்சல் ஊட்டி, உங்கள் பகுத்தறிவு கொள்கை காட்டுமிராண்டிக் கொள்கையாகத் தான் காட்சி தரும். சுதாரித்து எழுதுங்கள். 2 BCல் எழுதப்பட்டதாம் ராமாயணம். இவ்வளவு காலமாய் இருக்கும் ராம பக்தி முறியடிக்க, ஞாயமான புத்திசாலித்தனமான வாதங்களால் மட்டும்தான் முடியும். எழுத்தொழுக்கம் இல்லா பதிவுகளால் முடியாது.

நல்லவை நடக்கட்டும். நல்ல புத்தி கிட்டட்டும். தீமையை நிறமறிந்து பிரித்துப் பார்க்கும் திறன் நம்மக்களுக்குக் கிடைக்கட்டும்.

ஜெய் ஸ்ரீ ராம்!

சேது சமுத்திர திட்டத்தைப் பற்றிய நல்ல விளக்கங்கள் இங்கே காணக் கிட்டும்.

உங்கள் நம்பிக்கையைப் பகிருங்கள். இந்த திட்டம் நல்லதா கெட்டதா? நடக்குமா நடக்காதா? நடக்க வேண்டுமா கூடாதா?