Friday, March 30, 2007

Happy April 1st

பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டது இட ஒதுக்கீட்டுத் திட்டம்.

பிற்படுத்தப்பட்டோர் இந்த திட்டத்தினால் முன்னேறிய பிறகு, இட ஒதுக்கீட்டின் அவசியம் இருக்காது என்று இதை நிறுவும் போதே அன்றைய தலைவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால், ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் இடஒதுக்கீட்டை, துருப்புச் சீட்டாக பயன் படுத்தி, இதை அணையா விளக்காக காத்து வருகிறார்கள்.

தேர்தலில் ஓட்டு சேகரிக்கும் தந்திரமாக இதை பயன் படுத்த துவங்கியதால், அதற்க்கு பங்கம் விளைவிக்கும் எல்லா ஏற்பாட்டையும், இரும்பு கரம் கொண்டும், குள்ள நரி வித்தைகள் கொண்டும் தடுத்து வருகிறார்கள் நம் இன்றைய தலைவர்கள்.

100 குழந்தைகள் படிக்கும் பள்ளியில், 80 நோஞ்சான் குழந்தைகளும் 20 புஷ்டியான குழந்தைகளும் இருந்தார்கள்.
இந்த 80 நோஞ்சான் குழந்தைகளுக்கு புஷ்டி ஆகாரம் கொடுத்தால் நன்றாய் படித்து முன்னுக்கு வருவார்கள் என்று பல வருடங்களுக்கு முன் சட்டம் தீட்டி செயல் படுத்தினார்கள்.
இந்த நல்ல திட்டத்தினால் 80 குழந்தைகளும் புஷ்டி ஆனார்கள், முன்னேறினார்கள்.

ப‌ள்ளியில் மேலும் 100 குழந்தைக‌ள் சேர்ந்த‌ன‌ர். இதிலும் 80 நோஞ்சான், 20 புஷ்டி.
இப்பொழுது, ஒட்டு மொத்த‌மாக‌ 120 புஷ்டியும், 80 நோஞ்சான் பிள்ளைக‌ளும் இருந்த‌ன‌ர்.
இதில், புஷ்டி ஆகார‌ம் 80 நோஞ்சான் பிள்ளைக‌ளுக்கு வ‌ழ‌ங்கினால், ஏற்க‌ன‌வே உண்டு கொழுத்த‌ 80 பிள்ளைக‌ளும் இதில் ப‌ங்குக்கு வ‌ருகிறார்க‌ள்.
குழ‌ம்பிய‌ நிர்வாக‌மும் இருக்கும் 80 உண‌வு பொட்ட‌ள‌த்தை 160 குழந்தைக‌ளுக்கு பிரித்து வ‌ழங்கிய‌து.
ஏற்க‌ன‌வே புஷ்டியாகிய‌ பிள்ளைக்கு பெரிய‌ பாதிப்பில்லை. புதிதாக‌ சேர்ந்த‌ நோஞ்சான் பிள்ளை பாவ‌ம், புஷ்டியாக‌ வ‌ழியே இல்லாம‌ல் நலின்தே கிட‌க்கிற‌து.

ஏற்க‌ன‌வே புஷ்டியாக‌ உள்ள‌வ‌ர்க‌ளையும், ச‌த்துண‌வு வ‌ழ‌ங்கி புஷ்டி ஆக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளையும், ச‌ரியாக‌ பிரித்து அறிந்து உண்மையான‌ நோஞ்சான் பிள்ளைக்கு ச‌த்துண‌வு வ‌ழ‌ங்க‌ வேண்டும்.

இதைச் ச‌ரியாக‌ செய்யத் தெரியாம‌ல் இருப்ப‌து ப‌ள்ளிக்கூட‌த்தின் நிர்வாக‌க் கோளாறு.

பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் முன்னேறி இருக்கிறார்கள். (கலாம், நாராயணன் உள்பட) இந்த‌ முன்னேறிய‌வ‌ர்களில் பலர், நாம் தான் முன்னேறிவிட்டோமே, இனி இந்த‌ இட‌ ஒதுக்கீட்டை ந‌ம் பிள்ளைக‌ளுக்கு ப‌ய‌ன் ப‌டுத்தாம‌ல், உண்மையிலேயே ந‌லிந்த‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவோம் என்று தானாய் எண்ணி‌ வ‌ழி விட‌ மாட்டார்க‌ள்.

பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்டோரில் முன்னேறிய‌வ‌ர்க‌ள், முன்னேறாத‌வ‌ர்க‌ள் யாரென க‌ண்ட‌றிந்து உண்மையில் வாடுப‌வ‌னுக்கு ச‌லுகைக‌ள் கிடைக்க‌ச் செய்வ‌து அர‌சின் க‌ட‌மை அல்ல‌வா?

சாதி அடிப்படையில் வழங்கி வரும் சலுகைகள், பொருளாதார ரீதியில் வழங்கச் செய்தல் எப்படித் தவறாகும்?

அப்படி வழங்கினால் தானே, இடஒதுக்கீட்டின் உண்மைப் பலன் கிட்டும்?

இந்தியா மாதிரி ஒரு பெரிய நாட்டில், பொருளாதார ரீதியாக மக்களை அளவெடுத்து, வரிசை படுத்துவது கடினம் தான்.

கடினம் என்பதால், ஒரு செயலை செய்யாமல் இருப்பது சரியா?
இதைக் கூட செய்ய முடியாத நாம் எப்படி வளர்ந்து வல்லரசாகப் போகிறோம்? இதற்க்கு ஒரு திட்டம் தீட்டி செயல் படுத்த முடியாத மடையர்களா நாம்? நம்மை நம்பியா அயல் நாட்டிலிருந்து வேலைகள் வந்து குவிகின்றன?

இந்த மாதிரி சர்ச்சை கிளம்பும்போதெல்லாம், பந்த், கடை அடைப்பு, போராட்டம் என்று திசை திருப்பி, முன்னேற்றத்துக்கான வழி கிடைக்காமலே செய்து வரும் கொடுமை என்று தான் மாறும்?

அரசியல்வாதி தானாய் திருந்துவானா? உச்ச நீதிமன்றம் இதையெல்லாம் சரியான பாதையில் வழி நடத்தத்தானே இருக்கிறது? உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கவே இட ஒதுக்கீடு வேண்டுமென்பது, கண்மூடித்தனமான, சிறுபிள்ளைத் தனம்.

இணையத்திலும், எல்லா சர்ச்சைகளுக்கும், கண்மூடித்தனமாக எதிர்ப்பையோ ஆதரவையோ வழங்காமல், அறிவுபூர்வமாக ஒவ்வொன்றையும் அலசவேண்டும்.

ஊருக்குள் இருக்கும், அரசியல் சார்பானவர்களின் நெறிகெட்ட செயல், இணையத்திலும் பரவ வேண்டாம்.

பாவம் நமது ஏழைகள். அவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள். நமது அரசாலும், நம்மாலும். அவ‌ர்க‌ளுக்கு தேவ‌யான‌ ச‌லுகைக‌ள் கொடுத்து, அதை அவ‌ர்களுக்கு ம‌ட்டுமே முழுதாகக் கிடைக்குமாறும் வ‌ழி செய்வோம்.

இன்னும் எத்தனை காலம்தான், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கப் போகிறோம்?

Happy April 1st!

thoughts?

-BNI

தினகரனில் ப்ரசுரமான, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாரம்:


More links on this topic:
ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - குழலி

வாழ்க சனநாயகம் - நாகை சிவா

இட ஒதுக்கீடும், இடைக்காலத்தடையும் - ravi srinivas

இடஒதுக்கீடு இடைக்காலத் தடை: நம் கடமை - Prince Ennares Periyar.S

என் சமுதாயமே விழித்தெழு!! - சிவபாலன்

பந்த் - யார் முட்டாள் - IdlyVadai

13 comments:

Anonymous said...

இதே தினகரனில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பல கட்டுரைகள், செய்திகள் வெளி வந்துள்ளன. அதை எல்லாம் எப்பவாவது படித்தது உண்டா? அப்படி இருந்தால் அதையும் இங்கே போட்டிருந்தால், இப்போ நீங்க சொல்வதை கேட்கலாம். ஆனால்..?!

நீங்க பேசாமே Biased News of India என்று பெயர் மாற்றம் செய்துக்குங்க.. சரியா இருக்கும்.

- சேரன்

said...

சேரன், முழசா படிச்சீங்களா நான் சொல்லியிருப்பதை?
இடஒதுக்கீட்டுக்கு எதிரி அல்ல நான்.
கண்டிப்பா தேவைதான். ஆனால், யாருக்கு சேரணுமோ அவங்களுக்கு சரியா சேர்க்கணும்.
அதை சரியா சேக்கத் தெரியாத அரசின் குறையைத் தான் சொல்லி உள்ளேன்.

என் கண்ணில் பட்ட மற்ற பதிவுகளையும் கொடுத்துள்ளேன். பாrக்கலியா?

Anonymous said...

இட ஒதுக்கீடு பற்றிய எனது கருத்தும் அதுதான். ஆனாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த திருடர்களுக்கு தேள் கொட்டுனமாதிரி தெரியல. இப்பவே பந்த் அது இதுன்னு எறங்கிடானுங்க. நீங்கள் மார்க் செய்துள்ளவை பார்க்கும்போது உச்ச நீதிமன்றத்தின் மீது ஒரு நல்ல நம்பிக்கை பிறக்கிறது. அனால் அதை செயல்படுத்த வேண்டியது இந்த அரசியல்வாதிகள் தான். உண்மயிலேயே கஷ்டப்டுற வர்கத்த கண்டுபிடிச்சி இந்த அரசு சலுகைகள் தரனும்னு இஷ்ட தெய்வத்த வேண்டிக் கொள்கிறேன்.

said...

Anonymous,
கருத்துக்கு நன்றி. இஷ்ட தெய்வம் வேண்டுவதைக் கேட்டு, அரசியலாளர்கள் சரியானதை செய்ய அருள் புரியட்டும்.

said...

நல்ல அலசல், திருடராய்ப் பார்த்து திருட்டை ஒழிக்க முடியாது.

இந்த விசயத்தில், இந்த நடவடிக்கை ஒரு புதிய வெளிச்சம் கொண்டு வந்தால் நன்று,

said...

நல்ல பதிவு. இவ்வளவு அவசர அவசரமாக பந்த் அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் தாங்க எனக்கு இன்னும் புரியல....

ஆர்.கே. நாராயணனை பற்றி சொன்னீர்கள், அவர் தன் மகளுக்கு ஒதுக்கீடு பெற்றதாக கேள்விப்பட்டேன், அதே போல் கிரன் பேடியும் பெற முயற்சித்தாகவும் கேள்விப்பட்டேன்... இவர்களே இப்படி இருக்கும் போது மற்றவர்களை பற்றி என்ன சொல்லுவது...

said...

முதலில் சாப்பாட்டை போட சொல்லுங்கள். அப்புறம் யார் அதை சாப்பிடுவது என்று முடிவு செய்யலாம். முதலில் முடிவு செய் அப்புறம் சாப்பாடு போடுவேன் என்பது, இழுத்தடிப்பதற்கான யோசனையே தவிர வேறு ஒன்றுமில்லை.யார் புஷ்டியானவன், இளைத்தவன் என்பதை சம்பந்தப்பட்டோர்தான் முடிவு செய்யவேண்டும்.

OBCக்கு 1931ல் எடுத்த புள்ளிவிவரங்களை ஏற்காதவர்கள், SC/STக்கு மட்டும் அதை ஏற்பதேன்?
இதைத்தான் divide & rule என்று சொல்வார்களோ?

முதலில் இந்த மனுநீதியாளர்கள் creamy layer என்ற வார்த்தை நமது constitutionஇல் எங்கு இருக்கிறது/எப்படி குறிக்கப்பட்டு இருக்கிறது என்று விளக்குவார்களா?

said...

சமூக நீதியின் தலைநகரம் சென்னை.
சென்னையின் இதயம் அண்ணாசாலையில் எதையும் தாங்கும் இதயம் கொண்ட அண்ணாதுரையின் சிலை அருகே சாக்கடை அடைப்புநீக்க சாராயம் குடித்து மலம், நச்சு அமிலங்கள், வேதிப்பொருட்கள், விஷ வாயு என நிறைந்த சாக்கடைக்குழிக்குள் கயிறு கட்டி இறங்கும் துப்புறவுத்தொழிலாளார்களைப் பல தரம் பார்த்திருக்கிறேன்.

தமிழக முதல் அமைச்சராக கருணாநிதி, தமிழகத் தலைநகரான
சிங்காரச் சென்னையின் மேயராக ஸ்டாலின் எனப் பல ஆண்டுகள் பதவிகளில் இருந்திருக்கிறார்கள் இந்த சமூக நீதிக்காவலை தமிழகத்தில் 999 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த திரா"விட"க் கட்சியினர்.

இட ஒதுக்கீடு ஏன் இந்த துப்புறவுத் தொழிலாளிகளை மேம்படுத்தவில்லை?

இந்த நவீன யுகத்திலும், போர்டு, ஹூண்டாய், அசோக்லேலண்ட், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் என பெரும் தொழிற்சாலைகள் நிறைந்த தமிழகத்தில் மலம் அள்ள, சாக்கடைத் துப்புறவுக்கு இயந்திரம் ஏன் பயன்படுத்தப்படாமல் இம்மனிதர்கள் மலக்குழியில் முழுகி அடைப்பு எடுக்க வேண்டிய நிலை?

நாற்பதாண்டு பகுத்தறிவு, திரா"விட" ஆட்சியில் சுயமரியாதையின் இலட்சணம் இதுதான்!

ஆதிக்க சாதியினரான, மக்கள் தொகையில் அதிகமான வன்னியரும், தேவரும், அகமுடையாரும், கவுண்டரும், யாதவரும் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாமா?

சலுகைகளுக்காக ஓட்டுப்போட்டதால் முன்னேறிய சமுகமாய் இருந்து, பிற்படுத்தப்பட்டவர்களாகி, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகி சமூக நீதி காக்கின்றார்கள் இந்த முன்னாள் பல்லவ, சோழ, பாண்டியர்கள்?

இட ஒதுக்கீடு பொருளாதார நிலை கொண்டே நிர்ணயிக்கப்படவேண்டும்.

ஒருமுறை அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவ, பொறியியல், உயர் கல்வி, அரசு வேலை வாய்ப்பு பெற்று முன்னேறியவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தும்போதே அவரது அடுத்த தலைமுறைக்கு அந்த இட ஒதுக்கீட்டு முறை அளிக்கப்படமாட்டாததை ஏற்று ஒப்புதல் அளிக்கும் புகைப்படம் + கைரேகை அடையாளம் கூடிய படிவத்தில் கையொப்பம் இடவேண்டும்.

எம்.எல்.ஏ, எம்பி, மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர், இன்ஸ்பெக்டர், எஸ்பி, டிஐஜி, ஐஜி, தாசில்தார், கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , மின்வாரிய துணை இஞ்சினியர்கள் போன்ற மாதம் 20000/- சம்பளம் பெறுவோர் இதர சீனியர் அரசு அலுவலர்கள் என மாதம் 20,000/- சம்பள நிலை வரும் போது இம்மாதிரியான இடஒதுக்கீட்டுக்கு அவசியமில்லாத நிலையை உறுதி செய்யும் கைரேகை+ புகைப்பட அடையாளம் கூடிய படிவத்தில்
ஒப்புதல் தரவேண்டியது கட்டாயமாக்கப்படவேண்டும், இவர்களது ஓய்வூதியம் பெறும் தகுதியோடு இந்த இட ஒதுக்கீட்டுத் தகுதி இணைக்கப்படவேண்டும்.

இப்படிச் செய்தாலே அன்றி நலிந்த அனைவரும் இட ஒதுக்கீட்டில் பயன்பெற்று முன்னேறுவது அடுத்த 50 ஆண்டுகளிலும் நடக்காது. ராம்தாஸ் பேரனுக்கு , ராமதாஸ் இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் சமூக அநீதி தடுக்கப்படவேண்டும்!

said...

**முதலில் சாப்பாட்டை போட சொல்லுங்கள். அப்புறம் யார் அதை சாப்பிடுவது என்று முடிவு செய்யலாம்.**

முடிவு செய்யப்படாமல் அனைவருக்கும் சாப்பாடு போடப் படுவதால், நலிந்தவனுக்குக் கிடைக்க வேண்டியதை, புஷ்டியானவன் பிடுங்கித் தின்னுகிறான்.
நலிந்தவன், அன்று போல் இன்றும், குப்பை வாரியும், வண்டி இழுத்தும், பிச்சை எடுத்தும் பிழைக்கிறான். முன்னேறியவனை வழி விடச் சொல்லுதல் எப்படிப் பிழையாகிறது?

**புஷ்டியானவன், இளைத்தவன் என்பதை சம்பந்தப்பட்டோர்தான் முடிவு செய்யவேண்டும். **

கண்டிப்பாக. அதை கண்டு பிடிப்பது பெரிய கடினமாக இருக்காது. இலவச கலர் டி.வி கொடுக்க ஒரு லிஸ்ட் உருவாக்கப்பட்டதே சில மாதங்களில், அதைப்போல் தயாரிக்க முடியாதா என்ன?
80% பின் தங்கியவர்களில், ஒரு 30% ஆட்களாவது புஷ்டியானவர்கள் இருப்பார்கள்.

தானாய் ஒதுங்காத அந்த சுயநல வாதிகளை, சட்டம் கொண்டு, ஒதுக்குதல் தேவை.

said...

ஹரிஹரன், கருத்துக்கு நன்றி.

உண்மையாக நலிந்தவர்களை கணக்கெடுப்பது, ஒன்றும் பெரிய கம்பசூத்திரமாக இருக்காது என்று தான் நானும் நினைக்கிறேன்.

இதை அரசியல் காரணங்களுக்காக செய்யத் தயங்கும் நிலை தான் மாறணும்.

ஓட்டும், சாதியும் பின்னிப் பிணைந்திருக்கும் வரை, அரசியலாளர்கள் இதற்க்க்கு ஒரு மாற்று வழி காண மாட்டார்கள்.

said...

//முடிவு செய்யப்படாமல் அனைவருக்கும் சாப்பாடு போடப் படுவதால், நலிந்தவனுக்குக் கிடைக்க வேண்டியதை, புஷ்டியானவன் பிடுங்கித் தின்னுகிறான்.
//

சாப்பாட்டை போட்டால் தானே தெரியும் - யார் சாப்பிடுகிறார்கள் என்று. சாப்பாட்டை போடாமல் இருக்க இது ஒரு நொண்டிச்சாக்கு. creamy layer இல்லாததன் காரணமாக பாதிக்கப்பட்ட OBC மாணவர்கள் எத்தனை பேர் என்று மனுநீதிமான்கள் சொல்ல முடியுமா?

said...

**சாப்பாட்டை போட்டால் தானே தெரியும் - யார் சாப்பிடுகிறார்கள் என்று. சாப்பாட்டை போடாமல் இருக்க இது ஒரு நொண்டிச்சாக்கு**

அருண்மொழி, பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கிறது.
இந்த ஒதுக்கீட்டை அனுபவித்து தமது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டவர்கள் தானாய் வழி விடுவது நடவாது. அதனால், அரசு, இதை வழிமுறைப்படுத்தி, சட்டம் கொண்டு அவர்களை ஒதுக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
இதில் எங்கே தவறு காண்கிறீர்கள்.
பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு அமைந்தால் வரும் கஷ்டங்கள் என்ன? யாருக்கு? யாராவது இதைப் பற்றி எழுதி இருக்கிறார்களா?

இந்த ஆண்டு முடியாவிட்டால் கூட பரவாயில்லை, அடுத்த ஆண்டுக்குள்ளாவது, தனது மாநிலத்தில் உள்ளவர்களை, பொருளாதார ரீதியாக பிரித்தெடுத்து, இடஒதுக்கீட்டை, உண்மையில் ஒடுங்கி இருப்பவர்களுக்குத் தர வழி செய்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்கலாமே?

ஏன், இம்மியளவும் முயற்சி செய்யாமல், பழைய பாட்டையே பாடுகிறார்கள் நம் அரசியல் தலைவர்கள்?

The leaders totally lack interest and drive to really improve their below-poverty citizens.

No one is against reservations, if the reservation truely helps the deserved.

said...

Dooondu, sorry I couldn't publish your comment because of some filthy language in that.

If you could reword your thoughts and make it presentable, I will be more than happy to publish.

Thanks for your time.